ராமகாவிய ஆஞ்சநேயரின் அவதாரம்

317

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(7)

நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சனேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

ராமகாவிய ஆஞ்சநேயரின் அவதாரம்.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

தனது இரு கரங்களையும் ஏந்தியபடி தவமிருந்த அஞ்சனா தேவியின் கரங்களில் போடப்பட்ட கனியை, அவள் மிகுந்த ஆச்சரியமுடன் நோக்கினாள். யார் அதனைத் தனக்குத் தந்தனர்  என அறியாததால், அதனைத் தெய்வப் பிரசாதம் என்றெண்ணி உட்கொண்டாள். தினமும் தன்னுடைய கைகளில் விழும் கனிகளைப் பக்தியுடன் புசித்து வந்தாள். அஞ்சனையின் தவத்தின் ஜூவாலையின் பிரகாசம் கண்டு ஈஸ்வர மகாதேவரும், ஈஸ்வரியும் ஆகாயகங்கைத் தீரத்திற்கு வானரங்களாக வடிவு தாங்கி வந்தனர்.  “அஞ்சனாதேவிக்கு சந்தான பாக்கியம் உண்டாகும்” என்ற  தெய்வ வாக்கியத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற  எண்ணம் கொண்டனர். ஆணும், பெண்னுமாய் வந்த தெய்வ  வானரங்கள் சந்தோஷமாய் ஆகாயகங்கை தீர்த்த வனத்தில் கூடிக் களித்திருந்தனர். அப்போது ஆண் வானரத்தின் தேஜஸ் வெளிப்பட்டு, மரத்தில் இருந்த கனியின் மீது படிந்தது. அந்தக் கனியை வாயு பகவான், கைகளை ஏந்தியபடி தவமிருந்த அஞ்சனையின் கரங்களின் மீது விழும்படி  செய்தார். வழக்கப்படி கரங்களில் வந்து விழும் கனியை உண்டுவிடும் அவள், அதனையும் வழக்கப்படி “ஈஸ்வரா அர்ப்பணம்” என்று கூறியபடியே புசித்தாள். ஈஸ்வர மகாதேவரும்,பரமேஸ்வரியும் வானரவடிவில் இருந்தபடியே, “அஞ்சனாதேவியின் கர்பத்தில் உருவாகும் குழந்தை, பரிசுத்த ஆத்மனாகவும், சிரஞ்சீவியாகவும், வஜ்ர தேகனாகவும், கர்ம வீரனாகவும், மானுட அவதாரமாக வரும் பகவானுக்கு சேவை செய்து வாழ்வாங்கு வாழவேண்டும்” என ஆசியருளினர். மகா தேவரின் தேஜஸ் தெய்வீகக் குழந்தையாக அஞ்சனா தேவியின் கர்ப்பத்தில் உருவாகி, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுகாகக் கரு வளர்ந்து வரலாயிற்று.

 

அஞ்சனாதேவி தனது தவத்தைக் கிரமப்படி, நியமநிஷ்டைகளுடன் உள்ளன்போடு, பகவானை உள்ளத்தில் கொண்டு கடைப்பிடித்து வந்தாள். மாதங்கள் சில சென்றவுடன் தான் தனது உடலில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களை அஞ்சனாதேவி உணரத்தலைப்பட்டாள். சந்தான பாக்கியம் வேண்டித் தவமிருக்க, எவ்விதமான சம்பவங்களும் ஏற்படாமல், எப்படித் தான் கர்பவதியானேன்? என்றெண்ணி  அதிர்ச்சியுற்றுக் கலங்கினாள். தனது குலத்திற்கே இது களங்கம்; தனது தவத்திற்கே இது அபச்சாரம் என்றெல்லாம் நினைந்து அழுதாள். விரக்தியின் எல்லைக்கே சென்று விட்ட அவள், இனி தான் இவ்வுலகில் வாழவே கூடாது  எனத் துணிந்து ஆகாய கங்கைத் தீர்த்த மடுவில் விழுந்து தனது இன்னுயிரை மாய்த்துக்  கொள்ளவும் துணிந்து உறுதியாகச் சென்றாள். ராவணேஸ்வரன் வதத்திற்காக  ஏனைய தெய்வங்கள் எல்லாம் பூவுலகத்திற்கு பற்பல வடிவுகள் தாங்கி வந்த வண்ணமாக இருந்த முக்கியமான கால நிகழ்வு அது! ஈஸ்வர மஹாதேவரின் அம்சமாக, ஆஞ்சநேயராக, அவதாரம் எடுத்திட  சரியான தருணமும் வாய்த்து விட்டது. மரணத்தின் வாயிலில் காலடி எடுத்து வைத்துவிட்ட அஞ்சனாதேவியின்  முன்பாக ஆகாய கங்கைத் தீரத்தில் அனுக்கிரகம் செய்துவரும் வனதேவதை  தோன்றியது. அந்த தேவதை அவளிடம், “மகளே அஞ்சனாதேவி, மனக்கலக்கம் உறாதே. நான் ஆகாய கங்கை ஷேத்திரத்தின் வன தேவதையாவேன். உனது தந்தைக்கு ஈஸ்வர மகாதேவர் வாக்களித்தபடி அவருடைய பரிசுத்த ஆத்மாவின் கரு தான் தெய்வீகமாக உன்னுள் வளர்ந்து வருகிறது. அப்பிள்ளை உலகம் போற்றும் உத்தமனாக வருவான். ஆகவே பிராணத் தியாகம் செய்யும் எண்ணத்தை விட்டுவிடு. உனது மகனுக்கு ‘வாயு பகவான்’ சகல ஆற்றல் சக்திகளை யும் போதிக்கும் ‘ஆசானாக’ விளங்குவார். அதனால் ‘வாயு குமாரன்’ என்னும் பட்டப்பெயரையும் அவன் அடைவான். உனது தவமும் பலித்தது. இனி உனது இல்லம் சென்று மகிழ்வுடன் வாழ்வாய் ” என்று கூறி ஆசி வழங்கியது. 

 

அஞ்சனாதேவியின் வெற்றி வரவு குடும்ப அங்கத்தினரிடம் நிம்மதிப்போக்கை ஏற்படுத்தியது. அஞ்சனாதேவியின் தந்தை கேசரி மிகவும் உவப்பெய்தினார். வம்சம் தழைக்க வரப்போகும் வாரிசு எல்லா நலன்களையும் அடையப் பிரார்த்தனைகள் செய்து வரலாயினர். உரி ய காலகட்டத்தில் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் தெய்வீக அம்சத்துடன் அஞ்சனா தேவிக்கு ஆண் மகவு பிறந்தது. ஈஸ்வரரின் தெய்வீக அம்சமாக, ராம சேவைக்கெனவே பிறந்த, சொல்லின் செல்வர் இவரே!  ஶ்ரீ ராமரின் உடன் இருந்து “ராமகாவியம்”  என்ற நூலில், தெய்வீகப் பரிகாரங்கள் அனைத்தையும் இயற்றியவரும் இவர் தான்! ராமகாவியம் நூல் ஆஞ்சநேயரால் உருவாக்கப்பட்ட இடமே குரு ஈஸ்வராலயம் நாகவனம் பள்ளி கொண்ட  ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலத்தில் தான் என, குரு அகத்திய மகா முனிவரின் வாக்காகக் குறிப்பிட்டு இருக்கின்றார்.  இந்த நூல்  முக்கிய காரணம் கருதியே தெய்வங்களால் மறைக்கப்பட்டு விட்டது.

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button