ஆஞ்சநேயர் தாடை நீண்டு போனதேன்?

370

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(8)

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சனேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

ஆஞ்சநேயர் தாடை நீண்டு போனதேன்?

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

அறிவாளியாக,  சமயோஜித புத்தியுடன், தேஜஸ் மிக்கவராக, பலவானாக, மனித நேயம் மிக்கவராக, உதவி செய்வதில் சமய சஞ்சீவினியாகத் திகழும்  ஆஞ்சநேயரின் சமகாலத்தில் வாழ்ந்தவர் மகாஞானியும், லோக குருவுமாகத் திகழ்ந்த அகத்திய மகா முனிவர். அவர் எழுதி வைத்த ஏட்டில் ராம காவிய அனுமனைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளார். சீதாதேவி பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தைத் தனது வாலினால் கட்டி இழுக்கும் போது, அறுந்து போன வாலினை மீண்டும் பெற ஆஞ்சனேயர் தவம் புரிந்து பரிகாரம் செய்து கொண்ட இடமே குரு ஈஸ்வராலயம் நாகவனமாகும்.  அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் தனது பாலப்பருவத்தில் புரிந்த லீலா வினோதம் எண்ணிலடங்காதவை. இருந்தாலும் பக்தர்களால் மிகவும் போற்றிக் கொண்டாடப்படுவது பானுவைப் பழம் என எண்ணி வானில் பறந்த சம்பவம் தான்! தொட்டிலில் சயனித்து இருந்த இளம் வயது பாலன் ஆஞ்சநேயர், அதிகாலைப் பொழுதில் கண் விழித்த போது கண்ட காட்சி நாவில் எச்சில் சுரக்கச் செய்தது! வானில் செந்நிறப் பிழம்பென, தகதகவென ஒளி வீசிச்சுடர்ந்து எழுந்த காலைக் கதிரவனைக் கண்ட போது அதனை உண்ணுகின்ற கனி என்ற நினைப்பு அவனுக்கு உண்டாகி விட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது. பானுவைப் பழம் எனப் பசியுடன் பார்த்து உண்ணும் ஆவலினால், தாவிப்பறந்து வானி்ல் மிதந்து வாயுவேகம், மனோவேகமாகச் சென்றான் பாலன் ஆஞ்சநேயர். இந்தச் செயலினைக் கண்டு சூரிய தேவனும், ஏனைய தேவாதி தேவர்களும் வியப்பினில் ஆழ்ந்து போனார்கள். 

 

வானுலகில் அமராவதிப் பட்டணத்தை அரசாட்சி செய்து வரும் தெய்வ தேவர்களின் ராஜன் தேவேந்திரன் மட்டும் அதிர்ச்சியும், கோபமும் உற்றார். ஆதவன் சஞ்சரிக்கும் பாதையில் இன்று  நவகிரக நாயகர்களில் ஸர்பராஜன் ராகு பயணம் செய்து வந்து கொண்டிருந்தார். காரணம் ஒளி தேவன் சூரியனை, ராகு பீடிக்க வேண்டிய சூரியகிரகண நாள் அது! அதற்குத் தடையாகப் பறந்து வந்து கொண்டிருக்கும் பாலன் ஆஞ்சநேயர் முன்பாக, கண்களில் கோபக்கனல் வீச, கரங்களில் வஜ்ஜிராயுதத்தை ஓங்கிப் பிடித்தபடி  தேவராஜன் இந்திரன் தோற்றம் தந்தார். ஆஞ்சனேயர் அவரை வியந்து நோக்கினார். “சூரிய மண்டலம் நோக்கிப் பயணம் செய்யும் பாலகனே நீ யார்?” என தேவராஜன் இந்திரன் வினவினார். எதற்கும் அஞ்சாத பாலன் ஆஞ்சனேயர் அதனை செவிமடுக்காமல் சூரிய மண்டலத்தினுள் நுழைந்து விட்டார். ஸர்பராஜன் ராகு திகைத்து நிற்க, வெகு வேகமாக  சூரிய தேவனை நெருங்கிச் செல்லும் போது தேவராஜன் இந்திரன் தனது வஜ்ராயுதத்தை பறந்து சென்று கொண்டிருந்த பால அனுமன் மீது ஏவி விட்டார். அது இலக்கினை நோக்கி விரைந்து சென்று குறி தவறாது பாலன் ஆஞ்சநேயர் தாடையைத் தாக்கியது. எதிர்பாராத அதிர்ச்சியினால் நினைவு தப்பி மயக்கமுற்ற பாலன் ஆஞ்சநேயர் பூமியில் வந்து வீழ்ந்துற்றார். இந்த நிலை கண்டு அஞ்சனாதேவியும், ஏனைய அனைவரும் துயரத்தில் ஆழ்ந்து போயினர். தனது மகன் இறந்துபட்டான் என எண்ணி, “சர்வேஸ்வரா, மகாதேவா உனது அநுக்கிரகத்தில் கிடைத்த எனது மழலைச் செல்வம் ஆஞ்சநேயனுக்கு மரணம் சம்பவித்து விட்டதே; காப்பற்ற வேண்டும் ஐயனே ” எனக் கதறி அழுது மகனை மடியினில் கிடத்திக் கொண்டு, அவன் முகம் தடவிப் புலம்பினாள். அவளது புத்திரபாசப் புலம்பலினால், மகேஸ்வர புத்திரன் தான் ஆஞ்சநேயன் என்பதை அறிந்த தேவாதி தேவர்களும், பஞ்சபூத நாயகர்களும் ஒன்று கூடினர். அஞ்சனா தேவி திருமலையில் தவம் செய்தபோது, இறைவனது ஆணையினால் அவளுக்கு வாயுதேவன் மறைமுகமாக உதவிகள் செய்து வந்தார் அல்லவா? 

 

ஈஸ்வர மகாதேவரின் பரிசுத்த ஆத்ம புத்திரன், வானவர்கோன் இந்திரதேவனின் வஜ்ராயுதத்தின் கைங்கரியத்தால் தாடை நசுங்குண்டு, நீண்டுபோய்க் கிடந்த பாலன் அனுமனை, வாயுதேவன் கண்ணுற்றார். அடங்காத சினம் கொண்டு, வாயுவை ஸ்தம்பிக்கச் செய்து, பாலகன் அனுமனை கைகளினால் எடுத்து ஏந்திக் கொண்டு, அவ்விடத்தில் இருந்து மறைந்து எவ்விடத்தித்திற்கோ கொண்டு சென்று விட்டார். பால அனுமனுடன் வாயுதேவன் மறைந்த வினாடி முதல்  உலகில் இருந்த காற்றும் மறைந்து போனது. சகல ஜீவராசிகளின் இயக்கமும் நின்று அனைவரும்  மூர்ச்சித்து வீழ்ந்துபட்டனர். யாகங்கள் நின்று போயின.  திவ்யதேவதா சக்திகள் வாழும் அனைத்து லோகங்களுக்கும், போய்ச் சேரவேண்டிய அவிர்பாகங்கள் தடையாகிப் போனதால் அபரிமிதசக்திகள் குறைவுபடத் துவங்கி விட்டன. தேவாதி தேவர்கள் அனைவருமே நடந்துவிட்ட பிழைக்குக் கழுவாய் தேடிட முனைந்தனர். ஆனால் வாயுதேவனும், அனுமனும் எங்கு சென்றனர்?

  

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும்  தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button