Guru Eswaralayam (குரு ஈஸ்வராலயம்)

குரு ஈஸ்வராலயம் என்னும் மெய்யறிவு ஞான சபையானது வாழ்க்கையின் வெற்றிக்குச்சிறந்த உபதேசங்களை வழங்கி வருகின்றது. போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துவதால், இறையருள் கிடைக்கப்பெறுகின்றனர். கலிகாலத்தின் துன்பங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி அருள்பாலித்து வருகின்றது.

ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியினால் குழந்தைப்பருவத்திலேயே தடுத்தாட்கொள்ளப்பட்டவரே தவத்திரு நாகராஜன் சுவாமிகள். இறை சக்தியின் அருளோடும், தவஞான சித்தர்களின் ஆசிகளோடும், “குரு ஈஸ்வராலயம்” என்ற மெய்யறிவு ஞானசபை ஸ்தாபிதம் செய்யப்பட்டது. மகா ஞானியர்களின் துணையோடு இந்த அமைப்பு மக்களுக்குச் சேவை மனப்பான்மையோடு மிகச் சிறப்பாக உதவிகள் செய்து வருகின்றது.

குரு ஈஸ்வராலயம் நோக்கி வரக்கூடிய ஆன்மாக்களுக்கு இது ஞான வழிகாட்டக்கூடிய கைகாட்டி மரமாக விளங்குகிறது. வாழ்க்கை என்னும் கடலிலே திசை தெரியாது, தவிக்கும் மக்களுக்கு பாதுகாப்புடன் கரை சேர்க்கின்ற கலங்கரை விளக்கமாகவும் இருக்கின்றது.

ஞான தாகம் உள்ள ஆத்மாக்களுக்கு தியானப்பயிற்சியும், தியானப்பயிற்சியில் உள்ள ஆத்மாக்களுக்கு, உயர்ஞான சக்தியை அடையக்கூடிய மெய்யறிவு ஞானதவப்பயிற்சிகளும், மற்றும் சிறந்த பாட போதனைகளும் போதிக்கின்றது.

ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதும், தானத்திலே சிறந்த அன்னதானத்தை மகிழ்வுடன் வழங்கியும், இன்னும் இது போன்ற அநேக மக்கள் சேவையில் குரு ஈஸ்வராலயம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றது. தன்னுடைய ஆன்மீகப் பயணத்தில் குரு ஈஸ்வராலயம் அன்பர்களுக்கு நன்மைகள் பல அடையச் செய்கிறது.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று உலக மக்கள் நன்மையடைய வேண்டி சிறப்பாக மகாலக்ஷ்மி யாகம் இயற்றப்படுகின்றது. ஆன்மீக அருளுரைகளும், மெய்யறிவு ஞான சபை தியானமும், இறைசக்தி மீது பாடப்படும் இனிமை மிகுந்த பஜனைப்பாடல்களும், தெய்வீக சக்திகள் கலந்து கொள்ளும் அன்னதானமும், சிறப்பு வழிபாடுகளும், பக்தர்களின் கலந்துரையாடல்களும் மற்றும் பாட போதனைகளும், காண்போர், கலந்து கொள்வோர் அனைவரது கண்களையும், கருத்துகளையும் கவர வல்லன என்றால் மிகையாகாது.

உலக நலன் வேண்டி ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி இறை சக்திக்கும், மற்றும் குல தெய்வங்கள், சித்தர்கள், முனிவர்கள், மகரிஷிகள், அனைவருக்குமே ஆகாரங்கள் படைக்கப்பட்டு குரு மஹா ஜெபத்தை அனைவரும் ஒரே குரலில் ஏக்கமுடன் உச்சரித்து பக்தர்கள் வேண்டுகிறார்கள்.

இறை சக்தியை எண்ணி சமைக்கப்படும் அன்னதான உணவை நாம், தெய்வங்கள் நமக்குத் தரும் அமுதமாக, பிரசாதமாக எண்ணி உண்ணும் போது, நமது உடலைப்பற்றிய சகல பிணிகளும் அகன்று விடும். இது நிதர்சனமான உண்மை. குரு ஈஸ்வராலயம் நோக்கி வந்து, வார வழிபாடு, பௌர்ணமி வழிபாடு, திருவிளக்கு வழிபாடு மற்றும் இதர விஷேசப் பிரார்த்தனைகள், மெய்யறிவு தியானங்களில் கலந்து கொள்ளும் ஆத்மாக்கள் நாகலக்ஷ்மியின் பரிபூரண சுபிட்சத்தைப் பெற்றுச் செல்கின்றார்கள்.

ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை மாத பௌர்ணமிக்கு முதல் நாள், மாலை பௌர்ணமி உதய நேரத்தில், நடைபெறும் யாகத்தின் சிறப்பையும் அருளையும் எழுத்துக்களால் கூறிவிட முடிந்திடாது. நூற்றுக்கணக்கான உயிர் காக்கும் மூலிகைகளும் மகா யாகத்தில் சேர்க்கப்பட்டு ஸ்ரீ ஈஸ்வர மகாஜோதியின் அருளாசி கிடைத்து நமக்குப் பாதுகாப்பு மற்றும் ஆன்ம பலமும் ஏற்படுகின்றது.
மகாயாகத்தின் தன்மையினால் காற்று மண்டலத்தில் மின் காந்த சுழற்சி (Electro Magnetic Circulation)  அதிகம் ஏற்பட ஏதுவாகின்றது. இதனால் நல்ல காற்றும், பரிசுத்த மூச்சும் கிடைபதுடன் நமக்கு பல நன்மைகளும்  ஏற்படுகின்றன.

பக்தி மார்கத்தில் உள்ளவர்களும், ஞான தாகம் உள்ளவர்களும், மனித சக்தியே உயர்ந்த சக்தி என்ற கோட்பாடு உணர்ந்த அன்பர்களும், மேன்மேலும் நன்மை பெறும் நோக்கத்துடன் குருஈஸ்வராலயம் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் எண்ணப்படி அருளும், வளமும் பெற்று அறிவு ஜீவிகளாக வாழ்வாங்கு வாழ்கின்றனர்.

வாழ்வின் சகல வளங்களும் பெருகிட குருஈஸ்வராலயம் வந்து ஸ்ரீ ஈஸ்வர மஹாஜோதியின் அருள் பெற்று, தனி மனித சேவையை லட்சியமாகக் கொண்ட அநேக அன்பர்கள் தங்கள் குடும்பத்துடன் மெய்யறிவு ஞான சபையில் ஐக்கியமாகி உள்ளனர்.

ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியின் இறை சக்தியினால் அருளாசி கொண்டு ஆட்கொண்ட தவத்திரு நாகராஜன் சுவாமிகளின் நல்லாசியுடனும், வழிகாட்டுதல் படியும் சிறப்பாக குரு ஈஸ்வராலயம் செயல் பட்டு வருகின்றது.

குரு ஈஸ்வராலயம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியின் அருளாசியுடன் வெளியிடப்படுகின்ற இக்கையேட்டில், கூறப்பட்டுள்ள ‘மெய்யறிவு தியான வழி’யானது எளிய முறையாகும். சாதாரண மக்களும் அறிந்து தெரிந்து கடைபிடிக்கக் கூடிய முறையில் இருக்கின்றது.

குரு ஈஸ்வராலயத்திற்கு வருகை தந்து தவத்திரு நாகராஜன் சுவாமிகளிடம் “குருமஹாஜெபம்” உபதேசம் பெற்றுக் கடை பிடித்து, நிச்சயமாக வாழ்வில் வெற்றி பெற்று அன்பர்கள் பயன் அடைவார்களாக!

சித்தர் பெருமக்களால் இரகசியமாகக் கைக்கொண்ட “மெய்யறிவு தியான வழி” என்பது அனுபவப்புர்வமான உண்மையாகும். இறை சக்தியை ஒவ்வொரு ஆன்மாக்களும் தங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து உயர்நிலை அடைவதற்காக அருளப்பட்டதாகும்.

மக்கள் அறியாமை மயக்கத்தில் இருந்து விடுபட்டு, விஞ்ஞான பூர்வமான மெய்யறிவு உண்மைகளை உணர்ந்து ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியின் தொடர்புடன் அருள் பெற்று, வளம் பெருக வாழ்வாங்கு வாழவே ஆசி கூறுகிறோம்.

விளக்கங்களை குரு ஈஸ்வராலயத்திற்கு நேரில் வந்து தவத்திரு நாகராஜன் சாமிகளை சந்தித்து தெளிவு பெற்று செல்லலாம். ஞானம் தேடும் ஞானவான்கள், மெய்யறிவு தியான வழிமுறையை பின்பற்றினால் சக்தி எனப்படும் ஆற்றலையும், அன்பு என்றழைக்கும் தாய்மை குணத்தையும், பேரறிவாகிய ஞானத்தையும், அழகு எனப்படும் தைரியத்தையும், அடக்கமுடன் கூடிய அறிவையும், சாந்தம் என்று போற்றக்கூடிய பக்தி முதலான தெய்வீக குணங்கள் பெறுவீர்கள். அதனைக் கடைபிடித்து உயர்வடையவே பிரார்த்திக்கின்றோம்.