ஶ்ரீ வல்லபரும் வேதியரும் பயணம் மேற்கொண்டனர்.

227

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2

(35) ஶ்ரீ வல்லபரும் வேதியரும் பயணம் மேற்கொண்டனர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வேதியரைப் பார்த்து, ” எது கருதி வந்தீரோ அதன் விஷயங்களையும் உணரும் சக்தியை நீர் பெற ஆசி கூறுகிறோம். எந்தச் செயலையும் மனமொன்றி விவேகத்துடன் செய்து முடிக்கும் அறிவை அடைந்து வாழ்வாங்கு வாழ்வீர். காலம் கருதி தேவையானவற்றையே பேச வேண்டும். பயன் கருதி அனுமதியோடு மற்றவர் காரியங்களில் தலையிட மறுப்பில்லை. பிறர் கட்டளையிடும் வார்த்தைகளோ, சாட்சியோ வேண்டப்படாத சத்திய வந்தனாக இருக்க வேண்டும். உம்மிடம் நீதியும் தைரியமும் எப்போதும் பொருந்தி இருக்கும். உமது உள்ளத்தில் சாந்தம் எப்போதும் உண்டாக வேண்டுமாயின் பிறரின் ஆறுதல் வார்த்தைகளைச் செவிமடுக்காதே. நல்லோர் விரும்பிச் செய்யும் உதவிகளை நன்றியுடன் ஏற்கலாம். தீயோர் ஆதரவை எதிர்பார்க்கக் கூடாது. இறைவனைச் சார்ந்து மலர்ந்த முகத்துடன் சுதந்திரமாக வாழ்வீர். இனி நாகராஜனாகவே செல்வீர்” என நல்லாசிகள் வழங்கினார் வேதாள ரிஷி. அத்துடனில்லாமல் ஏட்டின் உண்மைகளை சில நாட்களுக்குப் போதித்தும் வந்தார். ஶ்ரீ வல்லபர் உடன் இருந்தார். வேதாள ரிஷியையும் தனது குருவாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வந்த அவருக்கும் மேலாக சற்குருநாதர் இருந்தார். அவர் அக்காலகட்டத்தில் இருந்த இடம் மகாகாலேஷ்வர் ஆலயத்திற்கு வெளியே இருந்த பெரிய அரசமரத்தடி மேடைதான். உஜ்ஜெய்னி மாகாளிப் பட்டினம் உருவாகிய போது சிவன் ஆலயம் மற்றும் அதனைச் சுற்றியிருந்த சிறிய கிராமமும் அதனுடன் இணைந்து கொண்டது.

ஆகாயத்தில் எப்போதும் பிரபஞ்சசக்தி அலைகள் அவ்வாலயத்தின் மீது இறங்கிக் கொண்டிருக்கும். சிறிய நகரமாக இருந்தாலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடை பெறும். சிப்ரா எனப்படும் குணவதி ஆற்றில் யோகியரும், ஞானியரும், நாகர்களும், கபாலியரும், அநேகத் துறவியரும், மற்றும் பல்வேறு இன ஆயிரக்கணக்கான மக்களும் வந்து புனித நீராடக் கூடுவார்கள்.அவர்களின் இடும் கோஷம் ‘அரஹர மகாதேவ்’ என்ற மந்திர ஒலியாக வானகமெங்கும் எதிரொலிக்கும். கும்பமேளா தினத்தில் தங்களின் தவசக்தி பன்மடங்காகப் பெருகும் என்பதை அனுபவத்தால் அறிந்து உணர்ந்த மகான்கள் ஆதலின் சதாரண மக்கள் குடும்பத்தினராக வந்திருந்து அவர்களின் அருளாசியைப் பெருவதைப் பாக்கியமாக எண்ணி வந்தனர். பாடலிபுத்திரத்தில் இருந்து விக்கிரமாதித்தியன் தனது குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் மந்திரி பிரதானிதகளுடன் வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அரசமரத்தடி மேடையில் சற்குருநாதர் படுத்துக் கொண்டோ அன்றி யோகநிஷ்டையில் அமர்ந்தோ இருப்பார். விக்கிரமாதித்தியன் நதியில் நீராடிப் பலவகை தான தர்மங்களைப் புலனடக்கம் கொண்டு நிறைவாகச் செய்வித்து, நதியின் கரையில் அமர்ந்து புலனடக்க விரதமுடன் இறை ஜெபத்தைச் ஜெபித்தபடி இருப்பான். அதனைக் கண்டு சற்குருநாதர் புன்முறுவல் கொள்வார்.

கும்பமேளா நிறைவடைந்ததும் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிப்ரா (குணவதி) நதிக்கரைப் பகுதி மற்றும் மகா காலேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றிலும் உள்ள குப்பை கூழங்களைத் துப்புரவு செய்து அவற்றை ஓரிடத்தி வைத்து எரியூட்டுவர். காடாறு மாதம் துவங்கி விட்டதால் விக்கிரமாதித்தியன் மற்றும் மதியூகி பட்டி இருவரைத்தவிர அனைவரும் பாடலிபுத்திரம் புறப்பட்டு விட்டனர். மகாகாலேஷ்வர் கோயில் முன்புற அரசமரத்தடியில் எந்நேரமும் தவம் செய்து கொண்டிருந்த சற்குருநாதர் முன்பாக விக்கிரமாதித்தியன், மதியூகிபட்டி இருவரும் சென்று பணிவான அன்புடன் வணங்கி நின்றனர். சற்குருநாதர் கண்கள் மலர்ந்து அவர்களைக் கனிவுடன் ஏறிட்டு நோக்கினார். அவரது கண்களின் தெய்வீக காந்த ஒளி ஈர்ப்பில் அப்படியே கட்டுப்பட்டு, தங்களை மறந்து அவரின் முன் தரையில் அப்படியே அமர்ந்து கொண்டனர். சற்குரு அவர்களைப் பார்த்து புன்னகை புரிந்தார்.
பிறகு, ” ஏ ராஜன் விக்ரம் நீ ஏராளமான நன்மைகள் புரிவதும், தான தர்மங்களை செய்து வருவதும், காடாறு மாதம் நாடாறு மாதம் அரசாட்சியினை நடத்துவதும், மக்களின் நிந்தனைக்கு ஆளாவதும் மன்னன் நீ செய்த பாக்கியம் மற்றும் புண்ணியம் இதுதானோ?” என்று கூறி விட்டு மௌனமாக விக்கிரமாதித்தியன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அப்போது மதியூகி பட்டி, “ஐயனே சற்குரு சுவாமியே தாங்கள் கூறியது அதிர்ச்சியாக உள்ளது. பிறருடைய தீய எண்ணங்கள் எங்களை அணுகாமல் காப்பதற்குத் தாங்கள் ஓர் உபாயம் உபதேசித்து அருளவேண்டும்” என்று கூறி அடக்கத்துடன் அமர்ந்து கொண்டிருந்தனர். சற்குருநாதர் ஆசி கூறிவிட்டு அவர்களுக்கு மனத்தெளிவை உருவாக்கலானார்.

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M. மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,
பொள்ளாச்சி –2 .


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button