999 தலைகள் கொய்த முனிக்கு உதவிய மன்னன்.

349

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் – 2

 

(18) 999 தலைகள் கொய்த முனிக்கு உதவிய மன்னன்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°

வசனகிரி மலைப்பகுதியில் புதிய தலைநகருக்குத் தகுந்த இடம் தேடிப்போய் வேதாளத்தை சந்தித்தார் அமைச்சர் மதியூகிபட்டி . வேண்டியபடி வேண்டிய உருவம் பெறும் அதனுடைய சக்தியால்  ஒரு ரிஷியைப் போலவே தோன்றித் தனது விருத்தாந்தங்களைக் கூறியது. தனக்கு சாபவிமோசனம் தரும் குப்தமன்னனுக்கு உதவப்போவதாகவும் கூறிவிட்டு, மதியூகிபட்டி தேடி வந்த இடமும் இதுதான் எனத் தெரிவித்ததைப் பார்த்தோம். இனி வேதாள சாபவிமோசனத்தைப் பார்ப்போம்.

ராஜசபைக்கு  மன்னனைப் பார்க்க ஒரு முனிவர் அனுதினமும் வந்து ஆசி கூறி விட்டுச் செல்லும் போது ஏதாவது ஒரு கனியை அன்பளிப்பாக அளிப்பது வழக்கம். இது அனுதினமும் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் விக்கிரமாதித்திய மன்னன் கவனத்தை ஈர்த்தது. அவருக்கு ஆசனமிட்டு அவர் வந்த நோக்கம் பற்றிய கருத்துக் கேட்கப்பட்டது. அதற்கு முனிவன், “ஏ ராஜனே கேளும், மனிதன் எந்தப் பொருளை இடை விடாமல் சிந்திக்கின்றானோ, அப்பொருளின் தன்மையை மனிதனின் மனம் அடைகிறது. வண்ணத்தில் தோய்த்த ஆடையைப் போல,  எண்ணங்களில் தோய்ந்த உள்ளம் நிறம் மாறுகின்றது. எனவே இந்த உடலில் உயிரை வைக்துக் கொண்டு வாழ விரும்புவன் எப்போதும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்கின்ற எண்ணங்களையே எண்ண வேண்டும். அரண்மனை வாழ்க்கையிலும் கூட ஒருவனால்  தூய்மை மிகுத்த உண்மை வாழ்வு வாழமுடியும். ஒரு பொருள் எதற்காகப் படைக்கப்பட்டதோ, அதற்கு இசையவே அதனுடைய இயற்கையும் அமைக்கப்பட்டுத்தான் அது வளர்ந்து வரும். அதுவே அதற்குரிய தர்மமும்,  அதன் நன்மையும் ஆகும்” என்று கூறிவிட்டு மன்னனது முகத்தையே உற்றுப் பார்த்தார்.

 

பிறகு அவர், “ராஜனே, அறிவுள்ள மனிதனுடைய நன்மை எதுவென்றால் ஒப்புறவறிந்து  நடத்தலாகும். அதற்காகவே மனிதனது ஜென்மம் என்று அறிவாயாக! படைப்பில் ஜீவனற்றவைகளை விட உயிருள்ளவை சிறந்தது. உயிருள்ள ஜீவர்களில் அறிவுள்ளவை மிகவும் சிறந்தவை. உலகினர் நன்மைக்காக ஜீவனற்றவைகள் நிர்மானிக்கப் பட்டுள்ளன. அறிவுள்ள மனிதர்கள் தமக்குள் ஒருவருக்கொருவர்  உதவிகள் செய்து பயன்பட்டு வாழ்வதற்காகவே ஜென்மமெடுத்துப் பிறந்திருக்கின்றார்கள்” என்ற பீடிகையுடன் மன்னனைப் பார்த்துப் புன்னகைத்தார். விக்கிரமாதித்திய மன்னன், “கூறுங்கள் முனிவரே, என்னதான் உமது தேவை? ” என்றதும், முனிவர் மன்னனிடம், ” ஏ ராஜன், முடியாத ஒன்றை எதிர்பார்ப்பது அறியாமையாகும்! உம்மால் முடியும் என்பதால் இயற்கைக்கு மாறாக நான் நடந்து கொள்வேன் என்றும் எதிர் பார்க்க வேண்டாம்” என்றதும் வந்திருப்பவர் சாமானியப்பட்ட நபரல்ல என்பதை மன்னன் அறிந்து கொண்டார். உடனே விக்கிரமாதித்திய மன்னன், ” ஏ முனிபுங்கவரே, மனநிம்மதியைத் தரக்கூடிய எந்தவொரு பொருளையும் மனித மனம் ஏற்றுக் கொள்கிறது. அதனைப் போலவே மனநிம்மதியைக் கெடுக்கக்கூடிய எத்தகைய பொருளாக இருப்பினும் அதனை விலக்கிக் கொள்ளக் கூடிய ஆற்றலும் மனித மனத்திடம் இருந்து வந்தாலும், அதனைக் கண்டு கொண்டு செயற்படுபவர்கள் அரிதாகத்தான் உள்ளார்கள். தன்னைத்தான் அறிந்து கொள்ளவும், தன்னைப்பற்றிப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும், தான் வேண்டியதை அடைந்து கொள்ளவும் பகுத்தறிவு படைத்த மனிதனின் லட்சணங்கள் இது என்பதையும் அறிவோம். உமது விருத்தாந்தம் என்ன? எம்மால் உமக்கு ஆகவேண்டிய காரியம் என்ன? என்று சொல்வீர் முனிவரே. அதனை நிறைவேற்றித் தருகின்றேன்” என்று மன்னன் வாக்குக் கூறியதும் வந்த முனிவன் திகைத்து மௌனமானார்.

 

பிறகு முனிவர், ” ஏ ராஜனே, அடியேன் பெயர் சக்திய சீலன். சில சித்துக்களை அடைய வேண்டி தவவாழ்வில் ஈடுபட்டதால் ஞானசீல முனிவர் என்றும் அழைப்பர். குணவதி நதியின் கரையில் உள்ள மாகாளிதேவி கோயிலில் கடுந்தவம் புரிந்து அம்மையின் அருள் வேண்டினோம். அவள் குறிப்பிட்ட தினத்தில் எமக்குச் சித்தி நிலை கிடைக்கும் என்று ஆசியருளினாள். அதற்கு ஒருமாத காலம் முன்பு அறிவின் ஜோதி விக்கிரமாதித்திய மன்னனை அழைத்து வந்து ஹோமபூஜை செய்திட உத்திர விட்டாள் காளியம்மை. கடந்த ஒருமாத காலமாக உமக்கு தினமும் மாதுளம்கனி தந்து வந்தோம். அதற்குள் விலைமதிக்க வொண்ணா ரத்தினக் கற்களை எமது பரிசாக உமக்கு வைத்துள்ளேன். குறித்த நாளில்  யாக பூஜைக்குத் தங்களை அழைத்துப்போக வருவோம். ராஜனே, உமது உத்திரவு என்னவோ? ” என்று கேட்டார். மன்னனும் சம்மதித்தார். அமைச்சர் மதியூகிபட்டிக்கு வேதாளம் கூறிய எச்சரிக்கை ஞாபகத்தில் உலவ மிகுந்த எச்சரிக்கையானார். வசனகிரி மலைப்பகுதிக்கு வேதாளத்தைச் சந்திக்க மதியூகிபட்டி விரைந்து சென்றார். வேதாளம் அவரிடம் சில ரகசியங்களைக் கூறியது.

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்

மதுரை M.மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button