வேதியர் வேணுநாதர் அடைந்தது மகிழ்வா? துயரமா?

219

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2

(26) வேதியர் வேணுநாதர் அடைந்தது மகிழ்வா? துயரமா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பரமேஸ்வரருக்குப் பிரியமானவரான ஆலய ஸ்தானிகரை காளிவனத்தில் வேதாளமாக தரிசிக்க எண்ணிய வேதியர் ஶ்ரீ வேணுநாதர், “வேதாள மகரிஷியே” என அழைத்தார். வேதபிராமணர் வடிவில் நின்ற வேதாளம் மகிழ்வுற்றது. மேலும் பல விபரங்களை எடுத்துரைத்தது. “காடாறு மாதம் உஜ்ஜெய்னி வனம் வந்த மன்னன் விக்கிரமாதித்தியனை சூழ்ச்சியால் சிறை செய்தான், காலன் தம்பனவசியன் எனும் காட்டுக் கள்வன். அன்னஆகாரம் இன்றி இருந்த மன்னன் தனது மூத்த சகோதரன் ஶ்ரீ வல்லப ரிஷியிடமிருந்து கற்றிருந்த சஞ்சீவினி மந்திரத்தினால் மூச்சடக்கி மரணமுற்றது போல் படுத்திருந்தார். தக்க சமயத்தில் நான் வந்து மன்னனது உடலை, வனபத்திரகாளி குகைக் கோயிலுக்குக் கொண்டு சென்று அம்மன் காலடியில் கிடத்தி விட்டேன். நடுஜாம நேரத்தில் குகையுள் ஜோதிப் பிரகாசம் தோன்றி மன்னனது உடலில் ஐக்கியமானது. மாண்ட மன்னன் மீண்டெழுந்தான். அன்று முதல் அமானுஷ்ய சக்தி மன்னனிடம் ஏற்பட்டு, பின் நடப்பதை முன் யூகிக்கும் சக்தி செயல்படத் துவங்கியது” என்றார் வேதாள மகரிஷி. வேதியர் வேணுநாதர் மகிழ்வுற்று வேதாள மகரிஷிக்கு நன்றி கூறினார். மேலும் வேதாளம், ” உத்தம வேதியரே, மூல நட்சத்திரத்தில் தீமை விளைவாக்கும் காலகதியில் பிறந்த சத்தியசீலன் என்ற மாந்திரீகன் தனது தவ வலிமையால் ஞானசீல முனிவன் என்ற பெயர் பெற்று, வேதாளத்தைத் தனக்கு அடிமையாக்க வேண்டும் என்ற நோக்கோடு விக்கிரமாதித்திய மன்னனை அணுகினான். தான் பெற்ற அமானுஷ்ய சக்தியைக் கொண்டு கணக்கினிலடங்கா செல்வவளத்தை உருவாக்கித்தந்து அரசன் மதிப்பைப் பெற்றான். ஞானசீல மாயா மாந்திரீகன் தான் செய்யும் மகாவேள்வி பூஜைக்கு மன்னன் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துச் சம்மதமும் பெற்று விட்டான்.”

“குறித்த காலத்தில் விக்கிரமாதித்தியன் மாந்திரீகனை காளி வனத்தில் வைத்து சந்தித்தான். தான் செய்யும் யாகத்திற்குப் பலி கொடுக்கக் காளிவனத்தில் தலை கீழாகத் தொங்கும் வேதாளத்தை பிடித்துத் தன்னிடம் கொண்டு வந்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். மன்னன் காளியிடம் வரம் பெற்ற இடத்தில் பெரிய முருங்கை மரமொன்று இருக்கவே, நான் அதன் மீது தலை கீழாகத் தொங்கியபடி மன்னன் வரவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டு இருந்தேன். விக்கிரமாதித்தியன் என்னைப் பிடித்து தனது தோளில் சுமந்து செல்லும் போது மகிழ்வுடன் சென்றேன். ஏனெனில் எனக்கு சாப விமோச்சனம் கிடைக்கப் போகின்றது அல்லவா? நான் ஒவ்வொரு புதிர் கதையாகக் கூறி, தகுந்த விடை கூறாவிடில் உமது தலை வெடித்துச் சிதறும் என பயம் காட்டினேன். மன்னன் இருபத்தி மூன்று புதிர்களுக்கும் ஏற்ற விடைகளைச் சரியாகக் கூறி விட்டான். வழக்கம் போல் உடனே பறந்து முருங்கை மரத்தில் தலைகீழாகத் தொங்கச் சென்று விட்டேன். மீண்டும் என்னை இறக்கிச் சுமந்து செல்லும் போது இருபத்தி நான்காவது புதிர்க் கதையைக் கூறினேன். விடை தெரியாத அந்தப் புதிருக்கு மன்னன் விடை கூறாது மௌனமாக இருக்கவே எமக்கு சாபவிமோனம் ஏற்பட்டு விட்டது. எமது வேதாள உடல் பறக்கும் ஓர் இயந்திர சாதனமாக மாறிவிட்டது. வேதாள் பட்டாக உருவெடுத்த எமக்கு இறைவன் அருளால் திரிகால ஞானம் உணர்ந்திடும் தன்மை வாய்க்கப் பெற்றது. வேதாளம் கிடைக்காத மாந்திரீகன் அதற்கு மாற்றாக மன்னனைப் பலியிட்டு ஆயிரம் அரசர்கள் தலைகளை அகோரயாகத்தில் இட்டு மகத்தான சக்தி பெறப் போவதாகக் கூறி, அதிலிருந்து தப்பிக்கும் உபாயத்தையும் தெளிவுபட எடுத்துரைத்தேன்.”

“எமது வேதாள உடல் இயந்திரமாக மாறியதைக் காளிவனக் குகை ஒன்றினில் பத்திரப்படுத்தி விட்டோம் ” என்று கூறிய வேதாள்பட் என்ற பிராமண வடிவில் இருந்தவர் வேதியர் ஶ்ரீ வேணுநாதரிடன் கூறி அவரது கண்களை இமையாது நோக்கினார். வேதியர் ஶ்ரீ வேணுநாதர் வேதாள வரலாற்றைக் கேட்டு அவரது மனம் சில சமயம் மகிழ்வும், சில சம்பவங்களால் துயரமும் மாறி, மாறி ஏற்பட்டது. வேதியர் வேணுநாதரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட வேதாள்பட், “ஐயா வேதியரே மன்னனுக்கு அடியேன் செய்த சேவையைப்பற்றித் தாங்கள் எண்ணுவது புரிகின்றது. எந்த மனிதனும் தன்னுடைய வாழும் வாழ்க்கை முழுவதையும் சேவை செய்தல் என்பதாகப் பயன்படுத்துவது மிக எளிதான காரியம் அல்ல! பற்பல பிறவிகள் எடுத்து அவற்றில் நல்ல செயல்கள் அநேகம் புரிந்து, அதனால் அனுபவ அறிவு ஞானம் ஏற்பட்ட பிறகே வாழ்க்கை முழுவதும் சேவை செய்திடும் பக்குவம் வந்துதிக்க முடியும் என்பது ஆன்றோர் பெருமக்கள் வாக்காகும்” என்றார். தான் மனதில் எண்ணியதை வேதாள்பட் கூறுவது மிக வியப்பை ஏற்படுத்தியது!

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் — 2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!
நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்,
மதுரை M. மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,
பொள்ளாச்சி – 2.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button