ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
04•11•2016,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(128) மனிதனே புனிதன் —
மேகநாதனை எதிர்கொண்ட நாகம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாசி மாதத்து ஒரு ஞாயிற்றுக் கிழமை. காலை சுமார் பத்து மணி இருக்கும். நமது சுவாமி நாகராஜ் அவர்கள் மதுரை விளாங்குடியில் உள்ள எங்கள் வீட்டின் முன்பு நின்றிருந்தார். நான் வெளி வேலையாகச் சென்று திரும்பி வந்த போது வீட்டின் வாசல் முன்பு வீதியில் நின்று கொண்டிருந்தவரை வீட்டினுள் வரவேற்றேன். எனது அத்தையம்மா அவர்களை சததிரவேளாளப்பட்டியில் இருந்து, அதிகாலையில் எனது சின்ன மைத்துனர் அழைத்து வந்து, வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றிருந்தார். சுவாமி வந்து விட்டால் வீட்டில் குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சி. நிறைய கேள்விகள் வைத்துக் கொண்டு அவரிடம் பதில் பெறுவார்கள்.
சுவாமி சாவகாசமாய் அமர்ந்து கொண்டு எல்லோரையும் நலம் விசாரிக்க, நாங்கள் சந்தோஷமாய் பேசிக் கொண்டிருந்தோம். எனது துணைவியார் நீலா அவர்கள் சுவாமிக்கு தேநீர் தயாரிக்க சமையலறைக்குள் போனார்கள். அத்தையம்மா மதியம் சமையலுக்குக் காய்கறிகள் நறுக்கிக் கொண்டும், உற்சாகமாகப் பேசியபடியும் இருந்தார்கள். வழக்கத்தை விடவும் அன்று சுவாமி அவர்களிடம் குடும்பம், பையன்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். “சுவாமி மதுரை விஜயம் ஏதாவது காரணம் இல்லாமல் இருக்காதே” என்று பீடிகையுடன் அத்தையம்மாள் கேட்டார்.
நமது சுவாமி, “ஆமாம் அம்மா, இன்று நம்ம மேகநாதனை சர்பம் தீண்டி மரணமடையச் செய்ய வருகிறது! அது எப்படி நடைபெறுகிறது? என்று வேடிக்கை பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்!” இதனைச் சாதாரண நிகழ்ச்சி போல் அவர் பேசவும், எல்லோரும் அவர் முன்பு கூடி விட்டனர். எல்லோருக்கும் அதிர்ச்சி என்பதைவிட வியப்புத்தான் அதிகமாகியது. அத்தையம்மா அவர்கள், “சுவாமி வேடிக்கைக்குச் சொல்லுகிறார்!” என்றார். தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த எனது துணைவியார் கண்களில் நீர் மல்க, “சுவாமி இங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கு?” என்ற வேதனைக்குரலில் வினவினார்.
சுவாமி அவர்கள், ” கவலைப் படாதீர்கள் அம்மா. எது நடந்தாலும் இறைசக்தி நன்மையாகவே நடத்தும்.வருந்த வேண்டாம் ” என்று கூறிவிட்டு, “சரி, சரி! மேகநாதன் நீ என்னருகில் அமர்ந்து கொள்! குழந்தைகளே, வெளிக்கதவைத் தாழிட்டு விடுங்கள்!”என்று உத்தரவு பிறப்பித்தார்.எல்லாம் வேகமாகக் காரியங்கள் நடந்தன. பிறகு எல்லோரும் தியானத்தில் அமர்ந்து கொண்டனர்.
உச்சிவேளை மணி பன்னிரெண்டு அடித்து ஓய்ந்தது. சுவாமி எழுந்து என்னுடைய வலது கையைப் பிடித்துக் கொண்டு, வீட்டிற்கு வெளியே செல்லக் கதவைத் திறந்தார். வாசலில் கடுமையான விஷத்தையுடைய சர்பம் சீறிச் சினந்து சீற்றமுடன் ஆடிக்கொண்டு இருந்தது. நான் சுவாமியின் தோள் வழியே, வாசலில் வந்து கோபத்துடன் சீறும் சர்பத்தைப் பார்த்தேன். என்னைப் பார்த்து விட்டு மேலும் ஆக்ரோஷமுடன் ஆடியது. சீறிப் பாய்ந்தது. என்னை வீட்டினுள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு சுவாமி மட்டும் வெளியே போனார். சர்பத்தின் முன்பு நின்று கொண்டு நமது சுவாமி அதனுடன் பேச ஆரம்பித்தார். எங்களுக்கு அது வியப்பாகவும் சற்று பயமாகவும் இருந்தது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.
Comments are closed, but trackbacks and pingbacks are open.