நந்தியின் சேவை.

293

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

20•10•2016,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(103) மனிதனே புனிதன் —
நந்தியின் சேவை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் நந்தி சுவாமியைப் பார்க்காமல் கோபுரவாசலை நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது அரிய காட்சி தான். இறையருளைப் பூரணமாகப் பெற்றவர்கள், ‘தான் பெற்ற இன்பத்தைப் பெறுக இவ் வையகம்’ என்று உணரச்செய்து காட்டுவதில் தான் பரிபூரணமாகிய பேரின்பம் அடங்கியுள்ளது.

நாம் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதற்கான முடிவைப் பெறுவதற்கான உயர்ந்த எண்ணமும், சோதனைகளைச் சாதனைகளாக மாற்றும் மன வலிமையும் இருந்தால், இறையருளைத் துணைக்கு அழைக்கும் போது, நமக்கு நிச்சயமாக உதவிகள் கிடைக்கும். மற்றும் ஒன்று! ‘நம்முடைய எண்ணங்கள் எல்லாமே இறைவனுடைய எண்ணங்கள் அல்ல’ என்னும் சிந்தனையை நாம் அடிக்கடி நினைவு கூற வேண்டும். இறைவனது செயற்பாடுகள் அனைத்துமே நமக்கு ‘அமானுஷ்ய சக்தியாய்’த்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்பதையும் நினைவினில் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இறைவனது சக்தியை உணர முடியும். நாம் ஒன்றை நினைக்கத் தெயுவம் ஒன்று நினைத்தது என்று கூறியதன் பொருளே, எதிர்மறையான எண்ணங்கள் மனிதனுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய உடலில் ஏற்படும் உணர்வுகள் மீதும், அதேபோல் மனதினில் தோன்றும் எண்ணங்கள் மீதும், நமது முழு கவனத்தை அதாவது விழிப்பு நிலையை ஏற்படுத்திக் கொண்டு நடப்பதைக் கவனித்து வரவேண்டும். அவ்வளவு தான்! இங்கு கவனித்தல் என்பதை ‘தியானம் செய்தல்’ என்று பொருள் கொண்டு விட்டீர்களானால் இன்னும் கூடுதல் சந்தோஷம் தான்! இன்னும் கூட தியானம் உணர்வுடன் எந்நேரமும் இருத்தல் என்பது சரியான விளக்கமாகும். தூங்கும் நேரத்தைக்கூட தியான உணர்வுடன் தூங்கித்தான் பாருங்களேன்! ஆகா, என்ன ஒரு பேரின்ப சுக உணர்வில் மனமும், உடலும் லயமாகின்றன!

படித்த உடனே புரியவில்லையே என்ற புலம்பல் எதற்கு? படிப்போம், திரும்பத் திரும்பப் படிப்போம்! கவனிப்போம்! விழிப்பு நிலையில் இருப்போம்! படித்தது புரியவில்லையா? சற்று நேரம் ஓய்வாக இருந்து பின் தியானம் செய்து அறிய முயற்சி செய்வோம். இதில் கட்டாயம் எங்கேயோ இருக்கிறதா? உள்ளன்புடன் கூடிய நமது ஈடுபாடு மட்டுமே தேவையானது. நம்மைப் படைத்த இறைசக்தியையும், நமக்கு உதவி செய்ய இறைவனால் அனுப்பப்பட்ட தெய்வ சக்திகள் பற்றியும், ஏன் பிரபஞ்ச ரகசியங்கள் பற்றியும், பூவுலக மீட்சி பற்றியும் அறிந்து கொள்ள எண்ணுகிறீர்கள் அல்லவா? இதற்காகத்தான் தன்நிலை உணர ஆன்மிக வழிமுறைகள் அநேகம் ஞானியர்களால் அறிவிக்கப்பட்டு உள்ளன. உங்களுக்குப் பிடித்த, ஒத்துவரக்கூடிய வழி ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுங்களேன்! நீங்கள் எதைத் தேர்வு கொண்டாலும் முடிவில் விழிப்புநிலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில்தான் முடியும்! முயற்சி செய்தீர்கள் என்றால் பிரபஞ்ச செய்திகள் வரத்துவங்கும்! மனதின் உணர்வுகள் சிரசின் உச்சியில் தங்கும்! தவநிலை சித்திக்கும்!

பற்பல சிந்தனைக் குழப்பங்களின் மன உணர்வுகள் இதயத்தில் தங்கி விடும் போது நிம்மதியாகத் தூங்காமல் தவிக்கும் நிலையை ஏற்படுத்தும்.
அமைதியான உறக்கத்தில் மன உணர்வுகள் சித்தத்தில் தங்கும் போது நிம்மதி யை உண்டாக்கும். ஆனால் தியானத்தில் உறங்கும் போது மன உணர்வுகள் சிரசின் உச்சியில் தங்குவதால் தெய்வீகத் தொடர்புகளை அது ஏற்படுத்தும்!

நந்தி சிவனை நோக்காமல் உலகத்தை நோக்கும் உண்மைகளும் புரிய வரும்!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Call Now Button