தீமைதரும் தீமையை ஓட்டுதல்!

258

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

12•03•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(255) மனிதனே புனிதன் —
தீமைதரும் தீமையை ஓட்டுதல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். “கோகுல், பகவானாகிய பராபரத்தை எண்ணி தியானம் செய்வதற்குப் பரிபூரண சுதந்திரம் வேண்டும் அல்லவா? கட்டுப்பாடுகள் இதற்கும் தேவையா? “என்ற வினாவினை சுவாமி கேட்டார்.
விளக்கின் சுடரைக் கண்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்த கோகுலகிருஷ்ணா தனது முகத்தை சுவாமியை நோக்கித் திருப்பினார்.
” அப்பா, சுவாமி அவர்கள் எங்களுக்குத் சொல்லியதைக் கூறுகிறேன். வீட்டைத் திறந்து வைத்து விட்டு எவர் நிம்மதியாக உறங்கினார்கள். கதவைத் தாழிட்டுக் கொண்டு பாதுகாப்புடன் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லையா? மனக்கட்டுப்பாடு எப்போது நமது சுதந்திரத்தைப் பறித்து விட்டது. நமது இஷ்டம் போல் வாழ்வது என்பது மிருக மனத்தின் தூண்டுதல் அதுதான். மிருகங்கள் கூட சில கட்டுப் பாடுகளுடன் வாழ்கின்றன. பகுத்தறிவு பெற்ற மனிதன் மனக்கட்டுப் பாட்டை இழந்து தீய சக்திகளின் வசமாகி விடுகின்ற நிலையைத் தானாகவே ஏற்படுத்தித் தவிக்கும் போது தான் உண்மை புரியும்.”

“அப்பா, எப்பவும் அபூர்வமான பொருள் என நினைத்தால் அதனைப் பாதுகாப்பது மனித மனத்தின் சுபாவம். உங்களை உலகின் காரிய நிமித்தமாக் கொணர்ந்த சற்குரு நாதரே சகல மெய்ப்பொருளையும் அறிந்தவர். நீங்கள் வழக்கமான தியானத்தில் வாழ்ந்து வரவேண்டும். அவரின் பாடபோதனைகளை நீங்கள் படித்து வரவேண்டும். எதிர்காலம் உங்களின் உண்மையை உலகினுக்குத் தெரிய வைக்கும். நீங்கள் சுதந்திரமாகத்தான் செயல்பட்டுக் கொண்டுள்ளீர்கள். தியானத்தில் அமர்ந்து சாந்த மனதுடன் இருங்கள். பிறகு வருகிறேன் ” எனக் கூறி தியான அறையை விட்டு வெளியே சென்றார். போகும்போது தீர்த்தம் வைத்துள்ள செப்புப் பாத்திரத்தை எடுத்துப் போனார். கோகுல் முதன் முதலில் இப்படிப் பேசியது நமது சுவாமி அவர்களுக்கு ஆச்சரியம் தந்தது. மனதின் பாரம் தீர்ந்து விட அமைதியாக ஈஸ்வர தியானத்தில் ஆழ்ந்து போனார். இனி தியான அறைக்கு வெளியே வாசலில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதைப் பார்க்கலாம்.

கோகுல், மெளலியை விடவும் வயதில் சிறியவர் அவர்களின் அத்தை மகன். அவர் அமானுஷ்ய சக்தியுடன் போராடிக் கொண்டிருந்தார். வயதிற்கும், அறிவினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மூன்று சிறுவர்களும் நிரூபித்துக் கொண்டிருந்தனர். அருகில் ஏதோ தீயசக்தியை அடையாளம் கண்டு கொண்ட வெள்ளலூர் சிறுவன், “ஏன் இங்கு வந்திருக்கிறாய்? ” என அதனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அது, “வீட்டினுள் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அந்த சுவாமி வேண்டும்” எனக் கேட்டுள்ளது. “அவர் என்னவோ, தியான அறையில், ஏதோ செய்து கொண்டிருக்கின்றார்! அந்த சுவாமி உனக்கு எதற்கு? ” என்று எதிர்க் கேள்வியை அந்தச் சிறுவன் கேட்டுள்ளார். அது ஆகாயத்தில் எழுந்து பறந்தபடியே, “உன்னிடம் எனக்கென்ன பேச்சு! நான் அந்த சுவாமியிடம் தியான சக்தியைப் கேட்டுப்பெறப் போகிறேன்” என்று கூறியிருக்கிறது. “அப்படியெல்லாம் அடுத்தவர் தியான சக்தியைப் பெற முடியாது. நீ இங்கிருந்து ஓடிப் போனால் உனக்கும் நலம்! எங்களுக்கு உள்ள கடமையைக் கெடுக்க முயலாதே! ஓடிவிடு!” என்று கட்டளை பிறப்பித்து விட, அதற்குக் கோபம் வந்து விட்டது.

கிராமத்தில் ஈரப்பதம் உள்ள இடங்களில் வசிக்கும் பிள்ளைப் பூச்சி என்ற ஒன்று உண்டு. அது வாசலில் ஊர்ந்து கொண்டிருக்க, அதன் மீது அந்தத் தீயசக்தி அமர்ந்து கொண்டு, வாசலில் சுற்றியபடியே சப்தமிட்டு, அந்தப் பூச்சிமேல் சவாரி செய்தபடி வீட்டினுள் நுழைய முயற்சி செய்திருக்கின்றது. இப்போது மெளலியும் ஜெபம் செய்தபடி எழுந்து அதன் அருகே சென்று விரட்டப் பார்த்தபோது, அந்த தீமைசக்தி இரு சிறுவர்களையும் வசப்படுத்த முயன்றது. அதற்குள் கோகுல் தியான அறைக்குள் இருந்து எடுத்துச் சென்ற தீர்த்தத்தை, அவர்களின் உள்ளங்கையில் ஊற்றி ஜெபிக்கச் செய்து, தானும் தனது வலது உள்ளங்கையில் தீர்த்தத்தை ஊற்றிக் கொண்டார். மூன்று சிறுவர்களும் சற்குரு நாதர் சொல்லித் தந்திருந்த ஜெபத்தை ஓதியபடி நீரில் முத்திரித்து, பிள்ளைப்பூச்சி மீது அமர்ந்து ஓலமிட்டபடி இருந்த, தீமை சக்தி மீது வீசினர். உடனே அது கெட்ட வாசனையை உருவாக்கிப் புகையைப் போல் மேலெழுந்து விரைந்து மறைந்து விட்டது. மனதை ஆசுவாசப் படுத்திக் கொண்டு மூவரும் வெளித் திண்ணையில் அமர்ந்து கொண்டனர். நமது சுவாமி தியான அறையை விட்டு வெளியே வரும் வரையில் அமைதியாக ஜெபம் செய்து கொண்டிருந்தனர். நம்புவது நமது மெய்யன்பர்களுக்கு சற்று கடினமாக இருந்தாலும்கூட, நடைபெற்ற சம்பவம் முற்றிலும் உண்மையே!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Call Now Button