சேலத்தில் ஞானப்பா வெளியீடு.

320

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

15•04•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(289) மனிதனே புனிதன் —
சேலத்தில் ஞானப்பா வெளியீடு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காங்கேயம் அடுத்துள்ள வெள்ளக்கோவில் என்னும் சிறு நகரத்தில் ஆங்கில மருத்துவம் புகழ் டாக்டர். R.கிருஷ்ணன் வாழ்ந்து வந்தார். இவர் பவானி தியான சங்கத்தை நடத்தி வந்த ஆத்மஞானி திரு.R.பால சுப்பிரமணியம் அவர்களின் தம்பியுமாவார். இவர்களின் தந்தையோ ஒரு ரிஷியைப் போன்று வாழ்ந்தவர். தியான சங்கத்தில் எழுதிவந்த ஞானப் பாடங்களை எல்லாம் ஆங்கிலத்தில் அட்சர சுத்நமாக மொழி பெயர்த்தார் இவர்தாம்! அண்னார் தம் திருநாமம், யோகி.B.ராமநாதன் அவர்கள். இவர் எழுதிய நூலின் காப்பு உரிமம் பவானி சங்கத்தைச் சேர்ந்தது. அந்த யோகியின் நூலின் பெயர் Reality of Divine Power. 1981- ம் வருடம் டிசம்பர் மாதம் வெளியிடப் பட்டது. இந்நூலின் விலை மதிப்புப் போடவில்லை. இதற்கெல்லாம் விலை மதிப்பு அனுமானிக்க முடியாது. அற்புதமான ஆங்கில ஞானநூல். திரு.B. ராமநாதன் ஐயாவுக்கு நமது சுவாமியுடன் பழகிடும் வாய்ப்பு ஏற்பட்டது. அது ஒரு ஞான காவியம் தான். நமது சுவாமி அவர்களுக்கு அவரின் குருநாதர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஸ்ரீ சூரிய நாராயணன் நடத்திய பாடமாகிய ஞானச்சடரை, இவரும் இவரது இரண்டாவது தவப்புதல்வன் வெள்ளகோயில் மருத்துவர் ஞானி திரு.R.கிருஷ்ணன் இருவரும் படித்துப் பரமானந் தத்தில் மூழ்கிப் போனார்கள். அது தனி அத்தியாயத்தில் எழுத உள்ளோம்.

ஞானி.திருவள்ளுவர் நாயனார் அவர்கள் எழுதிய அறிவு சார்ந்த உலகப் பொது மறையாம் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் மூன்றும் பெரும் முயற்சியில் அக்காலத்தில் வெளியிடப்பட்டது. மதுரையில் தமிழ்ச் சங்கப் புலவர்கள், அந்தக் குறள் நூலை ஒப்புக் கொள்ள மறுத்தார்கள். அக்காலத்தில் வாழ்ந்த மகா ஞானியும், பெண் புலவருமான ஒளவையார் அவர்கள் அரும்பாடுபட்டுச் சங்கப் புலவர்களுடன் சொற்போர் வாதம் நடத்தி, அவர்களைச் சம்மதிக்க வைத்தார். இருந்தாலும், பொற்றாமரைக் குளத்தில் இருக்கும் சங்கப்பலகை இடம் தந்தால் இக்குறள் நூலைத் தமது தமிழ்ச் சங்கத்தில் ஏற்றுக் கொள்ள எவ்விதத் தடையும் இல்லை என்று, தங்களின் இறுதித் தீர்ப்பை ஒளவை யாரிடம் உறுதிபடக் கூறி விட்டார்கள். ஊரும், உலகும், யாவரும் காணத் திருக்குறள் பொற்றாமரை மீதுள்ள தமிழ்ச் சங்கப் பலகையில் ஏறியது. ஸ்ரீ சொக்கநாதர் இன்னருள் புரிந்தார். உலகம் போற்றும் பொதுமறையாம் திருக்குறளில் இன்னும் வெளியிடப் படாமல் மறைக்கப் பட்ட பாகம், நான்காவதா கிய வீடு பேற்றைத் தரக்கூடிய ஞானப்பால் என்னும் அருமை மிகு ஞானநூலாகும். இதனை தியானத்தில் ஈர்த்துப் பெற்றவர் ஞானி டாக்டர். திரு.R. கிருஷ்ணன் ஆவார்.தியானத்தில் ஸ்ரீ திருவள்ளுவ நாயனருடன் தொடர்பு கொண்டு அவரிடமிருந்து பெற்று, பவானி தியான சங்கத்தின் வாயிலாக சேலம் மாநகரத்தில் திரு ஞானப்பாவை வெளியிட்டார். டாக்டர் திரு.R.கிருஷ்ணன் அவர்கள் பவானி தியான சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆகவும் பணி புரிந்து வந்தார். 1983- ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இதன் முதல்ப் பதிப்பு சேலத்தில் வெளியிடப்பட்டது. நமது சுவாமியும் அந்த விழாவில் கலந்து கொண்டார். ஆன்மிக வாதிகள் அநேகர் வந்திருந்தனர்.

தெய்வீகப் பக்திப் பாடல்கள் புகழ், சங்கீதக் கலாநிதி டாக்டர் திரு.சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பவானி தியான சங்கத்தின் அருட்பா பாடல்களை, அபிராமி அந்தாதி மெட்டில் அருமையாகச் பாடினார். விழாவினுக்கு மிக முக்கிய பிரமுகர்கள், மடாதிபதிகள் ஆகியோர் வந்திருந்தனர். இவ்விழா வினுக்குப்பிறகு தான் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் மூன்றாம் பாகம் புத்தம் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வந்தது. வெள்ளகோயில் டாக்டர் ஞானி R.கிருஷ்ணன் அவர்கள் ரத்தினகிரி பாலமுருகனடிமை என்னும் மஹா யோகியைத் தனது மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு பிரார்த்தனை செய்து வந்தவர். மற்றும் ஞானகுரு தவத்திரு. வேணுகோபால சுவாமியைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டு பற்பல அற்புதங்களை நிகழ்த்தியவர். நமது தவத்திரு. ஸ்ரீ நாகராஜன் சுவாமி மீது அன்பைச் செலுத்தி நட்பாக ஏற்றுக் கொண்டவர். ஒரு முறை நமது சுவாமி அவர்கள் வெள்ளக் கோயிலில் டாக்டரைச் சந்திக்கச் சென்றிருந்தார். தொலை பேசியில் பேசி அனுமதி பெற்றே சென்றிருந்தார். நமது சுவாமியை அவரது தகப்பனார் வரவேற்றார். கைகால்களை நீரினால் அலம்பி விட்டு உள்ளே வரச் சொன்னார். சுவாமியை அமர வைத்த அறையில் பல இடங்களில் நூறு ரூபாய் நோட்டுக்கள் வைக்கப் பட்டிருந்தது. குளியல் அறையிலும் பணம் வைத்திருந்தார். சுவாமி அவைகளைப் பார்த்தார். என்ன காரணத்திற்காகப் பணத்தை எல்லா இடங்களிலும் வைத்திருக்கின்றார்கள்? என்று எண்ணி விட்டுப் பிறகு தியானத்தில் அமர்ந்து கொண்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Call Now Button