ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
31•10•2016,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(114) மனிதனே புனிதன் —
ஆத்மா தருகின்ற ஆற்றல் சக்தி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உணர்வு என்பது ஆத்மாவின் செயல்பாடுகளே! உணர்வைக் கொண்டுதான் ஆத்மாவை அறிய முடியும். ஆத்மா என்பதை அறிந்தவருக்கு, அங்கிருந்துதான் அவர்களுக்கு ஆற்றல் சக்தி அபரிமிதமாகக் கிடைக்கப் பெறுகிறார்கள். ஆற்றல் அனுக்கிரஹம் கிடைக்கப் பெறுபவர் தான் விரும்பும் உயர்வாகியப் பிறவாப் பெரு நிலையை அடைந்து விடமுடியும். ஆத்மாவின் உணர்வில் இருந்து பெறப்படும் ஆற்றல் சக்தி மட்டுமே உண்மையான சக்தி என்பது நமது முன்னோர்களின் வாக்காகும்.
உலகில் மனிதர்கள் தங்களுடைய வலிமை என்று கூறிக்கொள்வதெல்லாம் அவர்களின் உண்மையான வலிமை அல்ல என்பது சித்தர்களின் கருத்து. ஞானியர்கள் கூறும் ஆற்றல் சக்தியை மனிதன் அறிந்து, தெரிந்து, உணர்ந்து விட்டால் மரணத்தைக்கூட வென்று விடலாம் என்பது அவர்களின் முடிவு! மனிதனின் உள்ளத்தில் இருக்கும் பயம் காரணமாகவே அவன் தன்னைப் பலசாலியாக, தைரியம் உள்ளவனாக, ஆற்றல் பெற்றவனாகக் காட்டிக் கொள்ள முயன்று வருகிறான்.
மனித முயற்சி அத்தனையும் பயத்தின் அடிப்படையிலேயே உள்ளது! எதிரிகளின் பயம், சொத்துக்கள் கைவிட்டுப் போய்விடுமோ என்ற பயம், குழந்தைகள் தன் பேச்சைக் கேட்காதோ எனும் பயம், தொழில் கூட்டாளி ஏமாற்றி விடுவானோ? என்ற பயம், தன்மீது தனது வாழ்வின் மீது பயம், தனக்குப் பாதுகாப்பு இல்லை என பயம், கடைசியில் மரண பயம் இப்படி எத்தனையோ பயங்களுடன் மனிதன் வாழ்கிறான்.
இவைகளின் பயம் காரணமாகவே மனிதன் தனது சக்தியின் ஆற்றலை வளர்த்துக் கொள்ள விரும்புகிறான். மனிதன் அடையும் ஆற்றலின் வலிமை வளர வளர, அவனது பயமும் வளர்ந்து விடுகிறது. செல்வம் சேரச்சேரப் பாதுகாப்பு அற்ற உணர்வும், பயமும் அவனை அலைக்கழிப்பதால் தான், மனிதன் வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் சக்தி உண்மையில் அதுவல்ல என்கின்றனர் மகா ஞானியர்கள். தன்னுடைய ஆத்மாவின் ஆற்றலை அறிந்து உணர்வதே உண்மையான வலிமை!
மனித மனம் மகத்தான சக்தி உடையது என்று இக்கால அறிஞர் பெரு மக்களின் கருத்து ஒரு வகையில் உண்மைதான்! அது எது வரையில்? மனிதன் தனது ஆத்மாவை உணர்ந்து கொண்ட பொழுது, ஆத்மாவில் இருந்தே மனதிற்கு ஆற்றல் கிடைக்கப் பெறுகின்றது என்ற உண்மையை குருநாதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும் வரைதான்! ஐம்புலன்கள் செயல்பட ஆற்றல் சக்தி வேண்டும். மெய், வாய், கண்கள், மூக்கு, செவி அனைத்திற்கும் தலைவனாக மனம் இருந்து அவைகள் செயல்படும் பிராண சக்தியை ஆத்மாவில் இருந்தே பெற்றுத் தருகின்றது.
ஆத்மா இறைவனது பிரதிநிதியாக மனிதனுள் இருந்து வருகிறது. அது பிராண சக்தியைப் தந்து மனம் மற்றும் பஞ்சேந்திரியங்கள் இயங்க உதவுகிறது. இறையருளாகிய ஆத்ம சக்தி தான் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது. ஆத்மா என்ற பிராணன் இல்லாமல் எதுவுமே இயங்காது. இறைவனே பிராணசக்தியாக இருந்து கொண்டும், இயக்கிக் கொண்டும் இருக்கின்றான். ஆத்மாவினால்தான் மனதைக் கொண்டு உலகினை நினைக்க முடிகிறது. பொருட்களைச் சம்பாதிக்க முடிகிறது. கற்பனை செய்ய முடிகிறது. எங்கும் எவ்விடத்திற்கும் சென்றுவர முடிகிறது.
இது மிகச்சிறந்த அறிவாகும்! அறிவை அறிவால் அறிவதற்கு முதலில் இறைவன் மீது நமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.
Comments are closed, but trackbacks and pingbacks are open.