மாதேஸ்வரன் மலை சித்தர்!

272

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

20•11•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(143) மனிதனே புனிதன் —
மாதேஸ்வரன் மலை சித்தர்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் போது எல்லோரும் உத்தரவு கேட்டு தியானம் செய்தனர். பிறகு உத்தரவு கிடைத்து விட்டதாகப் பேசிக் கொண்டனர். இப்போதெல்லாம் சாமிக்கு முன் ஜென்ம நிகழ்ச்சிகள் செய்தி களாகக் கிடைத்துக் கொண்டிருந்த நேரம்.
அதைப்பற்றியெல்லாம் தகவல்களை யாரிடமும் வெளியிட்டு விடாமல் கவனமாக இருந்தார். மற்றவர்கள் தியானம் பற்றிய பல விஷயங்களைப் பேசிக் கொள்வார்கள். நமது சுவாமி எல்லாவற்றையும் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். நாகராஜன் சுவாமிக்கும் நிறையக் காட்சிகள் தோன்றும். அதில் கவனத்தைத் செலுத்த மாட்டார். மாதேஸ்வரன் மலைக்குச் செல்லும் போது காட்டில் புலியுடன் வசிக்கும் ஓர் துறவியின் ஆசீர்வாதம் செய்யும் காட்சி மட்டும் கிடைத்தது. ‘வெளியே பேசினால் ஏதாவது கருத்துக்கள் விளையும்’ என்ற எண்ணம் ஏற்பட மெளனமானார்.

மேட்டூரில் மதிய உணவு சுவாமிக்கு வாங்கித் தந்தார்கள். உண்டபின் ATC பேருந்தில் குளத்தூர் வழியாக பாலாறு என்ற இடம் வந்தது. நூறடிப் பாலம் தாண்டிய பிறகு இப்போது காணப்படும் பெரிய வரவேற்பு வளைவுடன் கர்நாடகா எல்லையில் பேருந்து நின்று விட்டது. அதன் பிறகு கர்நாடகா அரசு தர்மச்சக்கரம் போட்ட, சிவப்புநிறப் பேருந்தில் KSRTC செல்ல வேண்டும். வெகுநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. வழி நெடுகிலும் தியானம் பற்றிய பேச்சே பேசினார்கள். ஏதாவது சாப்பிடத் தந்து கொண்டே இருந்தார்கள். மாதேஸ்வரன் மலையில் தங்குமிடம் வசதிகள் மிகுந்ததாக இருந்தது. வசதி மிக்கவர்கள் தனித்தனி அறைகள் எடுத்துத் தங்கிக் கொண்டனர்.

நமது சுவாமி தியானக் கூட்டம் நடைபெறும் மண்டபம் வசதிகள் நிறைந்திருக்க அங்கேயே மற்ற பக்தர்களுடன் தங்கிக் கொண்டார். அங்கு கரும்பு வெல்லத்தில் பர்பிகள் உடனுக்குடன் செய்து தரும் கடைகள் அநேகம் இருந்தன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தால் கடைகளில் வியாபாரங்கள் நல்லபடியாக நடைபெற்றன. அதிகாலையில் காப்பி சாப்பிட பக்தர்கள் சென்று விட்டார்கள். நமது சுவாமி தியானத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது சற்று நரையோடியதாடி, மீசை, பழனிப்பகுதியில் அநேகம் பேர் அணியும் வெள்ளை நிற ஜிப்பா, வேட்டி, தோளில் கதர் சால்வை சகிதம், நடுத்தர வயது, எளிமை மிகுந்த தோற்றமும் கொண்டு தவத்திரு வேணு கோபால சுவாமி மண்டபத்தினுள் வேகமாக வந்தார். வந்து நமது சுவாமியின் படுக்கை விரிப்பில் படுத்துக் கொண்டு, கால்மீது கால் போட்டுக் கொண்டார். தனது இடுக்கிய கண்களால் நாகராஜன் சுவாமி தியானம் செய்து முடியும் வரையிலும், பிடரியில் கைகளைக் கட்டிக் கொண்டு, நாகராஜன் சுவாமியைப் பார்த்தபடியை படுத்திருந்தார். சேலம் பகுதியில் இருந்து வந்திருந்த அன்பர்களும் தங்கள் படுக்கையில் அமர்ந்தபடி, வியப்பு மிகுதியால், இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Call Now Button