துறவு கொள்ளும் எண்ணம்.

289

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

18•08•2016,
வியாழக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(45) மனிதனே புனிதன் —
துறவு கொள்ளும் எண்ணம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உலகில் அநேக மக்கள் தீமை சக்திகளிடம் அகப்பட்டுக் கொண்டுள்ளார்கள். அதையும் அவர்கள் அறியாமலும், உணராமலும் இருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் தற் பெருமை பேசியும், அளவற்ற ஆடம்பரத்தை விரும்பியும், மனிதாபிமானத்தை இழந்தும், வீண்பகட்டைக் காட்டியும், இறையருளை மறந்தும் வாழ்கிறார்கள். பிறகு தீமையின் சக்தியுடன் சென்று பாவநெருப்பில் வீழ்கின்றார்கள். இறை நம்பிக்கை உடைய வறியோர்களையும், ஆதரவற்ற ஏழை, எளிய மக்களையும் அவர்கள் வெறுக்கின்றார்கள. மேலும் அவர்களுக்கு மனத்தில் துயரங்களையும், நிந்தனைகளையும் ஏற்படுத்தி அற்ப சந்தோஷம் கொள்கிறார்கள். நல்ல பண்புகளை அவர்கள் இழந்து விட்டாலும், இறைசக்தியானது ஒருபோதும் அவர்களை வெறுப்பதும இல்லை.

சுவாமியின் வரலாறு கூறும் போது பொய்க்கலப்பில்லாத உண்மையைக் கூறவே விரும்புகிறேன். கிராமங்களில் நடை பெற்று வரும் சில உண்மைகளை வெளியிட்டு உள்ளேன். பாரம்பரிய மக்களில் மாந்திரீகர்களில் மலை மக்கள் இருப்பது போன்றே, நாட்டில் சூதுவாது அறியா மக்களை ஏமாற்றி வாழும் கூட்டத்தில், ஆண்கள், பெண் என்ற பாகுபாடு கிடையாது. இன்றைய முன்னேற்ற வாழ்வில் இருக்கும் நாம் அன்றைய நாட்களை மறந்து விடக்கூடாது. எவ்வளவு செல்வ நிலை இருந்தாலும் அக்காலத்தில் பெண்களுக்கு அநேக உரிமைகள் மறுக்கப்பட்ட காலம் என்பதை நினைவில் இருத்தினால் மட்டுமே புரியும்.

எதற்கெடுத்தாலும் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள், செல்வத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு மனிதனின் தராதரத்தை எடை போடுபவர்களால், நிச்சயமாக நமது சுவாமி அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது. நமது பரிகார ஸ்தலத்தில் பூஜை செய்ய வந்த ஒரு நண்பரை எனக்கு நன்கு தெரியும். பூஜாரியாக வருவதற்கு முன்பே எங்கள் பகுதியில் உள்ள புலித்தேவன் மலையில் வைரக் கற்கள் தேடி அலைந்தவர். ஒரு சிறிய டப்பாவில் பட்டன் செல் வைத்து அதன் மீது கண்ணாடிக் கற்களை வைத்து விளக்கை எரிய விட்டு மாணிக்கக் கல் என்று ஏமாற்றும் கூட்டத்தில் இருந்தவர். உழைக்காமல் பணக்காரன் ஆகி வசதியாக வாழ வழி தேடி அலைந்து , பிறகு சுவாமி அவர்களின் சந்திப்பில் மனம்மாறி ஆன்மிகத் துறைக்கு வந்து பூஜாரியானவர். என்னதான் பூஜை செய்தாலும் தனது குணம், மனம் மாறாவிட்டால் யாது பயன்?

தனது சொத்துக்களை விற்று பணத்தை இரட்டிப்பாக்கும் கும்பலில் சேர்ந்து எல்லாம் இழந்தும் மனம் திருந்த வில்லை. இன்று அவர் தனது பேராசை குணத்தினால் மாந்திரீக சக்திக்கு அடிமையாகிப் போனார். மை போட்டுப் புதையல் தேடுவதும், தனது பேராசைப் பிடியில் அகப்பட்ட மற்றவர்களையும் சரியாகக் குழப்பம் செய்து வருவதையும் ஒழுங்காகச் செய்து வருகிறார். அவர் மனம் திருந்தி நல்ல குணத்துடன் வாழ வேண்டும் என குருஈஸ்வராலய மெய்யன்பர்கள் அனைவரும் பிரார்த்தனைகள் செய்து வருகின்றோம். நன்றி!

எதிர்மறையான எண்ணங்கள் மனிதனுடைய சிந்தனையில் இருப்பவை! ஒரு பொருளை நமது எண்ணத்தில் அதன்மீது கவனத்தைச் செலுத்தும் போது, அந்தப் பொருளினுடைய எதிர் மறையை நாம் உருவாக்கி விடுவோம். சுவாமி சொல்கின்ற படைத்தல் சக்தியாகிய முதல் அறிவு இதுதான். ஒரு பொருளின் குணத்தைக் கவனம் செலுத்தி அதனை அழகுவடிவம் என்று எண்ணும் போது அல்லது பிரித்துப் பார்க்கும் போதுதான் அவலட்சனம் என்பது உருவாகி விடும்! அழகு, அவலட்சணம் இரண்டுமே நமது மனதின் இயக்கத்தின் இரண்டு அங்கங்கள் ஆகும்.

சித்தர்கள் எதிர் மறைகளை எல்லாம் கடந்து சிந்திப்பவர்கள். அதனால் மகிழ்ச்சி – துக்கம், நன்மை – தீமை, பிறப்பு – இறப்பு, வெப்பம் – குளிர்ச்சி எல்லாம் தனித் தனியான அனுபவங்கள் அல்ல என்றும், நிலையாக இருக்கும் நித்தியம் என்று சொல்லக் கூடியவற்றின் இரண்டு பக்கங்கள் என்பதைத் தெளிவாகக் கூறினர். ஒரு முழுமை அடைந்தவைகளின் இரண்டு வித விளக்கங்கள் அல்லது வர்ணனைகள் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.ஆனால் இவையெல்லாம் தனிப்பட்ட அனுபவங்கள் அல்ல என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.

பகவத்கீதையில் கண்ணனும்
உலகத்தில் உள்ள எதிர்மறைகளைக் கடந்து நீ நிலையான உண்மையில் நிலை பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.
“வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பது” என்ற சித்தர்களின் தாரக மந்திரம்! சுவாமிக்குப் பொன்னம்மாள் பாட்டி,”எண்ணங்கள் அற்ற நிச்சிந்தையில் இருப்பாய்” என்று கூறியதை நினைவு கூற வேண்டும்.அப்போது தான் எதிர்மறையில் ஓற்றுமைகளைக் காண முடியும்!

இன்பமும், துன்பமும் ஒரே இடத்தில் இருந்தாலும் சித்தர்கள் நீ துன்பப்படு பிறகு சுகப்படு என்று சொல்வதில்லை. துன்பம் என்ற விதியை மதியினால் வென்று வாழலாம் என்று தான் கூறினார்கள். இது மனப்பக்குவம் வாய்க்கப் பெறாத மக்களிடம் பக்குவமாகக் கூறாவிடில் அவர்கள் ரசிப்பார்கள், ஆனால் ஏற்றுக் கொள்ளத் துணிவு வராது.

சுவாமி அவர்களுக்கு சந்நியாசம் கொள்ள வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருந்தது. பொன்னம்மாள் பாட்டி அதனை ஏற்க வில்லை. குருநாதரும் ஏற்கவில்லை என்பதைத்தான் ஏற்கனவே தெரிந்தோம். இவர் துறவு கொள்வதில் விடாப்பிடியாக இருந்தார். பாட்டியும் உடலில் ஏதாவது கோளாறு இருந்து தான் பையன் திருமணம் செய்ய மறுக்கிறானோ என்று எண்ணினார். அதற்கு சுவாமி,” தனது பதினெட்டாவது வயதில் எதற்காகத் திருமணம்? ” என்ற கேள்வியைக் கேட்டார்.
“உனது தகப்பனார் பத்தொன்பதாவது வயதில் கல்யாணம் செய்து கொண்டு வாழ வில்லையா?” என்றார் பாட்டி. இப்படிப்பட்ட நேரத்தில் சுவாமி மெளனமாக தியானத்தில் ஆழ்ந்து போவார்.

இந்த சமயத்தில் சுவாமியின் குருநாதர் மீண்டும் தோன்றினார். ஆற்றங்கரையில் சந்திப்பு நிகழ்ந்தது. புல் தலையில் குருநாதர் படுத்துக் கொண்டிருந்தார். சுவாமி அருகில் அமர்ந்து கொண்டார். அவர் எழுந்து சுவாமியைப் பார்த்து இடிஇடித்தது போல் பலமாகச் சிரித்தார். நமது சுவாமி அவரிடம்,”எந்தையே தங்கள் சித்தப்படி நடந்து கொள்கிறேன்” என்று மெதுவாகக் கூறி மெளனமானார். குரு நாதரும்,”சித்தன் வெளிப்படுவானடா! நன்நெறிகளை மக்களிடம் சொல்வானடா..” என்றார்.

நாகராஜன் சுவாமியும்,” எந்தையே காட்டில் வழி தெரியாது அலையும் பித்தன் போன்றது என் நிலை! சுயமாகச் சிந்திக்கும் உரிமையைப் கூடவா இழந்து விட்டேன்?” என்றார். “நாகராஜா ஜென்மத்தொடர்பில் நீ நிறை வேற்றி முடிக்க வேண்டிய காரியங்கள் அநேகம் உள்ளது. அதற்கு இந்தப் பிறவியில் திருமண பந்தம் அவசியமாகிறது. அடுத்து நீ பிறவி பெற்றால் உனது துறவு ‘ஆசையும்’ நிறைவேறும்” என்றார். அதற்கு சுவாமி, “பத்து ஆண்டுகள் எனக்கு அவகாசம் தரவேண்டும். பிறகு இல்லற வாழ்வு ஏற்றுக் கொள்கிறேன்” எனவும், குருநாதர் மொளனமாகச் சிரித்தார். நெற்றியில் விரலை வைத்துச் சுற்றினார். பிறகு புறப்பட்டு வேகமாக
நடந்தவர் மறைந்து தான் போனார்.

அடுத்து வந்த பத்து ஆண்டுகளில் சுவாமி தாங்கவொண்ணாத் துயரத்திற்கு ஆளாகிப் போனார். சற்குரு நாதரும் சுவாமியைப் பார்க்க வரவில்லை. எல்லாம் எதிர்மறையானது. எதனையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டும் விட்டது. பாட்டியின் வாக்குப்படியே உடல் நிலை சீர்கேடு அடைந்தது.
நரகவேதனையை உலகத்தில் கண்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Call Now Button