தெய்வீக மாமனிதன் அவதாரம்!

299

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(16)

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

தெய்வீக மாமனிதன் அவதாரம்!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கோசல தேசத்தில், ரகு வம்சத்தில் சிறந்த அறிவும், தகைமை சான்ற நற்பண்புகளும் ஒருங்கே அமைவு பெற்று விளங்கிய தசரதச் சக்கரவர்த்தியானவர்  அயோத்தி பட்டினத்தைத் தலை நகரமாகக் கொண்டு நல்லாட்சி புரிந்து வந்தார். அவருக்கு அறிவுடைய கௌசலை, பேரன்பு கொண்ட கைகேயி, பணிவுடைய சுமித்திரை என்ற மூன்று அரசிகள் இருந்தும், புத்திர பாக்கியம் இன்றி இறைவன் அருளை வேண்டியிருந்தனர். முன்னொரு காலத்தில் கச்சியபரிஷியும் அவரது மனைவி அதிதியும் புத்திர பாக்கியம் வேண்டி, மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்து வரம் பெற்றனர். அந்த வரத்தின் நோக்கம் நிறைவு பெரும் பொருட்டு அவர்கள் இருவரும் இப்பிறப்பில் தசரதராகவும், கௌசல்யையாகவும் தோன்றினார்கள். பரந்தாமன் அவர்களுக்கே பிள்ளையாகத் தோன்றப் போகின்றார். சூரிய வம்ச குலகுரு வசிஷ்டர், புத்திரன் வேண்டி தவமிருக்கும் தசரதரிடம் புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை, கலைக்கோட்டு ரிஷி ரிஷ்யசிருங்கரைக் கொண்டு செய்திட வேண்டும் என ஆலோசனை கூறினார். அப்படியே யாகமும் சிறப்பாக நடைபெற்றது. யாக குண்டத்தில் இருந்து பரந்தாமனின் தூதுவராக அக்கினி தேவர், கையில் பொற்கலசத்துடன் வெளிப்பட்டு அதனை தசரதன் கையில் அளித்து ஆசீர்வதித்தார். கலசத்தில் இருந்த தேவப் பிரசாதத்தை தசரதர் தமது மூன்று மனைவியர்களுக்கும் விகிதாச்சாரமாகத் தந்து உண்ணச் செய்விக்க , மூவரும் கருவுற்றனர். அரசன் ஆனந்தக் கடலில் மூழ்கிக்களித்தார்.

 

உரியகாலத்தில் பட்டத்தரசி கௌசல்யா தேவி, இன்னருள் தந்து சகல லோகங்களையும் ரட்சித்து, பேரின்பத்தால் மகிழச்செய்யும் ஆனந்த வடிவுடைய விஷ்ணுவின் அம்சமான ராமச்சந்திர மூர்த்தியை ஈன்றெடுத்தாள். அன்று சித்திரை மாதத்து ஒன்பதாம் நாள், சுக்கில பட்சம், நவமி திதி, நண்பகல் வேளையில் ஶ்ரீ ராமர் பிறந்தார் என அக்கால ஜோதிட விற்பன்னர்களால் ஜாதகம் கணிக்கபட்டது. மன்னனின் இரண்டாவது அரசி கைகேயி தேவிக்கு உலகனைத்தையும் காத்து ரக்ஷிக்கும் விஷ்ணுவின் அம்சமாக பரதன் என்ற புத்திரன் ஜனனமானார். தசரதரின் மூன்றாவது அரசி சுமத்திரா தேவிக்கு இரட்டைப் பிள்ளைகள் விஷ்ணு மூர்த்தியின் அம்சங்களாக சில நாட்கள் சென்று பிறந்தனர். அவர்களோ எண்ணத்தால் எண்ணியவுடன் பகைவரை அழிக்கும் சத்ருக்னனும், உலகத்திற்கு ஆதாரமான ஆற்றல்கள் பெற்றவரும், நற்குணங்கள் அனைத்திற்கும் இருப்பிடம் ஆனவரும், என்றுமே ராமரைத் தனது தலைவனாக எண்ணி, அவரை விட்டு அகலாத அன்பு உள்ளம் கொண்டவருமான லக்ஷ்மணப் பெருமாளும் ஆவார்கள். நான்கு வேதங்களும் இவர்களின் வடிவங்களாகவும், பரந்தாமனின் அம்சமே இவர்களுக்குள் செயல்பட்டது  என்று கருத்தை மகா ஞானியர்கள் வரவேற்றனர்.

 

தெய்வாம்சமான ராமரின் பூலோக விஜயம்   சராசரி அப்பாவி மனிதனைப் போல தோன்றினாலும், அவரது மகத்துவம் “ராம” என்ற மந்திரச் சொல்லை ஜெபம் செய்த பக்தர்களை அன்றி யாரும் உணர முடிந்திடாது. மனதினை ஈர்க்கவல்ல ராம மந்திரத்தை ஜெபம் செய்யும் போது மகிழ்வைத் தருகிறது. அத்துடன் சிந்தையில் நல்லுணர்வை வளர்த்து, ஜெபம் செய்பவரைப் பண்பாளராக மாற்றி அருளைப்பெற வைத்து விடுகின்றது. மனிதனின், சோர்வு, சலிப்பு, சங்கடத்தை நீக்குவதுடன், ராம ஜெபம் ஞானத்தை ஊட்டுகின்றது. அறிவினைத் தெளிவாக்கி வாழ்வை வளமாக்குவதுடன், பக்கத் துணையாய் இருந்து பாதுகாக்கின்றது. கள்ளங்கபடமற்ற  மனிதனே அறநெறியின் வடிவம் ஆதலால், அவன் கடைப்பிடிக்கும் அறமானது அவனை இறையருளுடன் ஐக்கியநிலை பெறவைத்து விடுகின்றது.

இயற்கையின் சக்திக்குப் பிரியமானது எது?  என்ற கேள்விக்கு ஞானியரின் பதிலானது, “நன்மை, தீமை இரண்டையும் அது உடைத்து, வேறொன்றாய் மாற்றம் பெற வைத்து விடுகின்றது” என்பது தான். இதுதான் பூவுலகில் மனிதனின் வாழும் வாழ்க்கையாகத் துலங்குகின்றது. வாழ்வில் உருவாகும் எத்தகைய எதிர்ப்பையும் சமாளிக்கும் மன வலிமையை, வெற்றியை ராமஜெபம் நல்குகின்றது என்பதே ராம காப்பியத்தை உலகினுக்கு வழங்கிய வால்மீகி ரிஷியின் முடிந்த உண்மையாக மிளிர்கின்றது.

 

( குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தலம் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம், ஓம் குருவே துணை!

 

அருளாசிகள்,

தவத்திரு நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளிகொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button