ஜீவிதசகாய ப்ராணசக்தியே வாழ்க! வாழ்க!!

419

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(11)

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

ஜீவிதசகாய ப்ராணசக்தியே வாழ்க! வாழ்க!!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சகல ஜீவர்களையும் இறைவனது ஆணையால் உயிர்ப்புடன் இயக்கிக் கொண்டிருக்கும் வாயுதேவர்   பிரசன்னமானார். மகாதேவர் வாயு தேவரிடம், “திருமலையில் புத்திர பாக்கியம் வேண்டித் தவம் செய்து வரும், உமாதேவியின் அம்சமான அஞ்சனைக்குத் உதவும் நிமித்தமாக செல்ல வேண்டும். தவத்திற்குக் குந்தகம் ஏற்படாமல் பாதுகாத்தும் வரவேண்டும். நாமே  ஆட்கொள்ளத் தக்கசமயத்தில் வருவோம். சென்று வருவீர்” எனக்கூறி வாழ்த்தி அனுப்பினார். இரண்டு கைகளையும் ஏந்தியபடியே தவமிருந்த அஞ்சனா தேவியைப் பாதுகாத்து வந்த வாயுதேவர், உணவின் தேவைகளையும் பூர்த்தி செய்ய அவ்வப்போது கனிவர்க்கங்களை ஏந்திய கைகளில் வைத்து வந்தார். மகாதேவர் உரிய நேரத்தில் பார்வதிதேவியுடன் ஆகாயகங்கைத் தீர்த்த வனத்திற்கு வருகை புரிந்தார். அங்கு பிராணசக்தி எனும் வாயு தேவன் சேவை சாதித்து வரும் காட்சியைக் கண்டார். அஞ்சனாதேவியின் ஜென்மாந்திர வாசனையான மிருகவசீகர எண்ணத்தின் சக்தி  பெண் வானரமாக  உருக்கொண்டு எழ மகாதேவர் ஆசீர்வாதம் தந்தார். அதன்படியே அது உருவானது. மகாதேவரும் ஆண் வானரமாக உருமாறி நின்றார். வானரங்கள் இரண்டும் மரங்களில் தாவி விளையாடி உல்லாசமாக  வாழ்ந்து வரலாயின. அப்போது வானரரூப மகாதேவரின் தேஜஸ் வெளிப்பட்டு மரத்தில் இருந்த கனிகளின் மீது படிந்தது. அந்தக் கனிகளில் ஒன்றை பிராணசக்தி எனும் வாயுதேவன் கொண்டு போய், கைகளை ஏந்தித் தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனையின் கரங்களில்  சேர்ப்பித்தார். அதனை தெய்வீகப் பிரசாதமாக எண்ணிச் சாப்பிடக் கேசரிக்குத் தந்த வரம் பலிதமானது. அதனால் கிடைத்த புத்திரன்தான் மகா வலிமை பொருந்திய ஆஞ்சநேயர், மகேஸ்வர புத்திரன். சிவனாரின் அம்சமாக அவதரித்த பலவான் இவரே!” எனத் தேவர்களுக்குக் கைலாயவாசி ஆலால முனிவர் கூறி சந்தேகத்தை நிவர்த்தி செய்தார். அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.

 

தேவலோக அமராவதிப் பட்டினத்து தேவர்களின் அதிபதி இந்திரராஜனின் கோபத்திற்கு ஆளாகி, வஜ்ஜிராயுதத் தாக்குதலுக்கு உட்பட்ட பாலகன் ஆஞ்சநேயர், தேவர்களின் உபசரனையில் கண்விழித்து எழுந்தார். அழகிய அவரது முகத்தில் தாடைப்பகுதி நீண்டு போனது. அஞ்சனாதேவிக்கு மகன் மீண்டும் கிடைத்தில் ஏற்பட்ட ஆனந்தத்திற்கு  அளவே கூற முடியாது. ஆஞ்சநேயர் தேவர்களின் அருள் பல பெற்று வஜ்ஜிர  தேகத்துடன், சிரஞ்சீவியாக வாழ்ந்து வரலானார். அனுமான் தனது விளையாட்டுத் தோழர்களுடன் சேர்ந்து பெரிய கற்களை எடுத்து வீசி விளையாடுவதும், மரங்களை வேருடன்  பெயர்த்து ஆகாயத்தில் வீசி எறிந்து மகிழ்வதும்தான் அவரது பொழுது போக்கு.  இது வனங்களில் ஆஸ்ரமங்கள் அமைத்து, வேள்விகள் செய்து, தவம் புரிந்து வரும் யோகிகள் மற்றும் முனிவர்களுக்குப் பெரிய இடையூராக வந்தமைந்தது. யாகங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் வந்து விழுகின்ற கற்கள்  மற்றும் மரக்கிளைகளால் பெரும் அவதிக்கும், இன்னல்களுக்கும் உட்பட்ட தபஸ்விகள் இனிமேல் இவைகளைப் பொறுக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அனுமானின் கீர்த்தி, பலம், சிரஞ்சீவித்தன்மை மற்றும் மகேஸ்வர புத்திரன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவரை அடக்கி வைக்க எண்ணிய முனி, ரிஷி, புங்கவர்கள் ஒன்று கூடி சாபமிட்டனர். அது என்ன வென்றால், “ஆஞ்சநேயனுக்குத் தனது பலம் மறந்து போகக்கடவது” என்பதுதான்.

 

தபஸ்விகளின் வாக்கு சாபமாக மாறி ஆஞ்சநேயரைப் பற்றிக் கொண்டது. தனது பலம் முற்றிலும் மறந்து போய் அனுமான் சாதுவாக மாறிப்போய் விட்டார். அஞ்சனை  தனது மகனுக்கு ஆஸ்ரம தபஸ்விகள் இட்ட சாபத்தினை அனுமானின் தோழர்கள் மூலம் அறிந்து கொண்டாள். சாபநிவர்த்தி வேண்டி சாதுப்பிள்ளையாக மாறிப்போன தனது மகனை , ஆஸ்ரம முனிவர்களிடம் அழைத்துச் சென்றாள். அவர்களைப் பணிந்து வணங்கித் தனது மகனின் அபச்சாரத்தைப் பொருத்தருள வேண்டும் என்றும், சாபவிமோசனம் தந்தருளி அருள் பாலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். ராவணசம்ஹார நிகழ்வுக்கு உதவி புரிய அவதாரம் எடுத்த சிவனது அம்சமாக வந்திருக்கும் அனுமானுக்கு உதவி செய்திட எண்ணி சாபவிமோசனம் அருளினர். ” அஞ்சநேயர் முன்பாக அவர் பலத்தை ஞாபகப்படுத்தினால், சக்தி வாய்ந்தவர் என்று கூறினால், அந்த நேரத்தில் மட்டுமே அவரது பலம் ஞாபகத்திற்கு வரும். மற்ற நேரத்தில் அது நினைவிற்கு வராது போகும்”  எனக்கூறி ஆசியருளினர். முனிவர்களின் சாபம் கூட ஒரு வகையில் நன்மையாகவே முடிந்தது. ஏனெனில் வஜ்ரதேக பலவானை யார் தான் அடக்க முடியும்?

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு

இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button