இந்திரனுக்கு உதவிய அயோத்தி மன்னன்

692

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(31) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

இந்திரனுக்கு உதவிய அயோத்தி மன்னன்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அயோத்தியை தசரதச் சக்கரவர்த்தி ஆண்டு வந்த சமகாலத்தில், வைஜயந்திப் பட்டினத்தைத் தலைநகரமாகக் கொண்டு, திமித்ரசன் என்னும் மன்னன் தண்டக வனம் என்னும் ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருந்தான். அந்த சமயத்தில் சம்பராசுரன் என்னும் கொடியவன் தண்டகவனத்தின் மலைப் பகுதியின் இருள் அடர்ந்த காட்டினுள் பல்லாயிரம் அகோர யாகங்கள் செய்து தீயசக்திகள் பலவற்றை அடைந்தான். அதனைப் போலவே கடுமை மிகுந்த தவங்கள் பல நோற்று, அதீத சக்திகள் பெற்று சகல ஜீவர்களுக்கும் துன்பங்கள் தந்திட எண்ணி இறுமாந்து இருந்தான். அவனது தவக்கனல் இந்திரப் பதவிக்கு ஆபத்தை உருவாக்கி இருந்தது. அதனால் தேவேந்திரன் கடுங்கோபமுற்று அசுரர்கள் மீது யுத்தம் புரியத் தயார்நிலையில் இருந்தான். சம்பராசுரனால் இடப்படும் கட்டளைகளை அசுரர்கள் ஒன்று திரண்டு நிறைவேற்றி வந்ததால் சகல ஜீவர்களும் துன்பத்திற்கு ஆளாகித் தவித்து வந்தனர். தெய்வங்களை வேண்டி பிரார்த்தனைகள் செய்தனர். தெய்வீக யாகங்கள் நடைபெற விடாமல் கொடுமைகள் பல செய்து வந்தனர். நிமித்ரச ராஜன் செய்வதறியாது திகைத்தான். அப்போது தேவேந்திரன் தேவர்களுடன் படையெடுத்து பூலோகம் வந்து நிமித்ரச மன்னனது வைஜயந்தி நகரில்  தங்கியிருந்தான். தேவாசுர யுத்தம் நடைபெறுவதில் பங்கு கொள்ள அநேக நாட்டு மன்னர்கள் நெஞ்சில் துணிவோடும், தங்கள் படைகளுடனும் முன்வந்தனர். தசரதச் சக்கரவர்த்தி தனது பிரிய மனைவி கைகேயியையும் அழைத்துக் கொண்டு யுத்தகளத்திற்கு வந்திருந்தார். 

 

சம்பராசூரனுடன் யுத்தம் மூண்டது. பூவுலக வேந்தர்களின் படைகள் தசரதச் சக்கரவர்த்தியின் தலைமையில் ஒன்றுதிரண்டன! வானுலக தேவர்களின் சேனைகள் தேவேந்திரன் தலைமையில் அணிதிரண்டன! இவ்விரு படைபலங்களை அசுரர்கள் ஒருங்குகூடி  எதிர்த்தனர். பகல் முழுவதும் நடைபெற்ற யுத்தத்தில் அநேக வீரர்கள், தண்டகவனத்தில் மாண்டு வீழ்ந்தனர். அசுரர்கள் செய்வதறியாது திகைத்தனர். மாலை நேரத்திற்குப் பிறகு இருள் சூழ்ந்ததும் மாயாயுத்தத்தில் தேர்ச்சி

பெற்றிருந்த அசுரப்படைகளின் பலம் பெருகத் துவங்கியது. அசுரர்களால் பூலோக மன்னர்களின் படைவீரர்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். தசரதரின்  யுத்தம் மிகவும் சிறப்பாக இருந்தது. நெருப்பில் வீழ்ந்த விட்டில் பூச்சிகள்  போன்று அசுர வீர்கள் அவரது கரங்களால் கொத்துக் கொத்தாக மடிந்து போயினர். யுத்த களத்தின் எல்லா இடங்களிலும் அவரது தேர் சஞ்சரித்து உலா வந்தது. அது கண்டு சம்பராசூரன் சூழ்ச்சியால் மாயா யுத்தம் புரிந்து, தசரதச் சக்கரவர்த்தியின் தேர்த்சக்கரத்தின் ஒரு அச்சாணியை உடைத்தெரிந்தான். அப்போது கைகேயி தேர்த்தட்டின் மீது தசரதன் பின்புறமாக நின்று கொண்டிருந்தாள். தேரின் சக்கரத்தின் அச்சு பொடிபட்டதும்,  தான்  வேண்டும் போது கைவிரல்கள் இரும்புக் கம்பிகளாக மாற்ற இயலும்  என்ற சாபப்படி, அச்சாணி இருந்த இடத்தில் தனது இரும்புக் கம்பிபோன்ற விரலை நுழைத்து தேர் சாய்ந்து வீழ்ந்து படாமல் காப்பாற்றினாள்.

 

இரவில் அசுரர்கள் பலம் மிகவும் அதிகரித்ததால் வீரர்களில் அநேகம் பேர் மரணத்தைத் தழுவிக் கொண்டிருந்தனர். தசரதமன்னனின் தேர்ப்பாகன் மார்பில் வேல் பாய்ந்ததால் அவன் தேர்த்தட்டில் சாய்ந்து மரணமுற்றான். தேரோட்டி கொல்லப்பட்டவுடனேயே தசரதரும் பலத்த தாக்குதலுக்கு ஆட்பட்டு படுகாயமுற்று  மயக்கமடைந்தார். கைகேயி புத்தி சாதுர்யத்துடன் தேரை லாவகமாகச் செலுத்தி யுத்தகளத்தை விட்டு வெளியேற்றி அப்பால் வெகுதூரம் கொண்டு சென்று கணவனது உயிர் காத்தாள். தகுந்த சிகிச்சைகளுக்குப் பின்  சக்கரவர்த்தி தசரதர் கண்விழித்து, உயிர் காத்த கைகேயிக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறி உணர்ச்சி வசப்பட்டார். தனது பிரிய மனைவிக்கு இரண்டு வரங்கள் தருவதாகவும் வாக்களித்து, அதனை உடனேயே கேட்கும்படி கூறினார். தனக்கு எப்போது சமயம் வாய்க்கின்றதோ, அப்போது அவ்விரண்டு வரங்களையும் கேட்டுப் பெற்றுக் கொள்வதாகவும் கூறினாள். அவைகள் அரசபெருமானிடமே இருந்து வந்தன.அந்த இரண்டு வரங்களை ஞாபகமூட்டிக் கேட்கும்படி கூனி மந்தரை கைகேயினிடம் கூறினாள். வரம் கேட்பதற்கு ஊடல் மாளிகையைத் தேர்வு செய்து கொண்டனர். சயன அறையை அலங்கோலப்படுத்தி விட்டுத் தலைவிரி கோலமாகத் தரையில் கிடந்தாள் கைகேயி. ஶ்ரீராமனின் பட்டாபிஷேக வைபவத்தை முதலில் தனது பிரிய காதல் மனைவி கைகேயினிடம் கூறுவதற்கு தசரதச் சக்கரவர்த்தி குதூகலத்துடன் புறப்பட்டுவந்தார்.

 

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button