விஷ்ணுவை நோக்கித் தவமிருந்த யோகினி!

226

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(23) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

விஷ்ணுவை நோக்கித் தவமிருந்த யோகினி!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அக்காலத்தில் உழவுத் திருவிழா என்ற சிறப்பு வைபவம் நாவலந்தீவில் கொண்டாடப்பட்டு வந்தது. விழாக் காலம் துவங்கும் போது அந்த தேசத்தின் ராஜன் முதல் உழவைப் பூமியில் பதிய வைப்பார். அதன்படி மிதிலை நாட்டின் வேந்தன் ஜனகர் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட கலப்பையை ராஜரிஷபங்களைப் பூட்டி பூமியில் உழுதார். படைச்சாலில் உழுத போது தங்கக்கலப்பையின் கொழு பூமியில் ஏதோ ஒன்றில் அகப்பட்டு உழவு நின்று போனது. சேவகர்கள் கலப்பையின் கொழுவில் அகப்பட்டிருந்தது என்ன? என்றறிய மன்னன் உத்தரவின் பேரில் பூமியில் அகழ்ந்து அப்பொருளை வெளிக் கொணர்ந்தனர். அது தந்தத்தாலான மிக வனப்புடைய அழகான பேழை! திருவிழக் காணவந்த கூட்டத்தினர் அங்கு கூடி விட்டனர். ராஜரிஷி ஜனகர் முன்பாக அந்தப் பேழை வைக்கப்பட்டது. ஜனங்கள் அனைவரும் நிசப்தமாகப் பேழையையே பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆலய பண்டாக்கள் பூஜை செய்தபின்பே பேழை திறக்கப்பட்டது. சிவப்புப்பட்டு வஸ்த்திரம் கொண்டு உட்பகுதி மூடப்பட்டிருந்தது. ராஜரிஷி ஜனகர் பட்டு வஸ்திரத்தை விலக்க, செந்தாமரைப் புஷ்பம் போன்ற நிறமுடைய பெண்குழந்தை ஒன்று, களுக் என்று சிரித்தபடியே கை கால்களை உதைத்துக் கொண்டிருந்தது. அதனைக் கண்டு விட்ட ஜனங்கள் ஆரவாரத்துடன் ஜெயகோஷமிட்டனர். இந்த அதிசய நிகழ்வைப் பற்றி பலபடியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

 

குழந்தை கண் இமையாது ராஜரிஷி ஜனகரையே பார்த்துக் கொண்டிருந்தது. விழிப்பு நிலை பற்றிய செய்தியை அது அவருக்கு உணர்த்தியது.  “மனிதனின் வாழ்க்கை விழிப்பு நிலையில் இருந்தால் தான் அவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். பூமியின் மடியினுள் நான் உறங்கிக் கொண்டிருந்ததாக எண்ணுவது சரியல்ல! என்னையும் ஒரு சக்தி பூமியினுள் விழிப்பு நிலையில் பாதுகாத்துக் கொண்டு இருந்தது. கனவுகளற்ற விழிப்புடன், படைப்பு முழுவதுமாய் நிறைவு பெற்றுள்ள பூமித் தாயின் மடியில் உறங்குவது போல் சுகம் பெற்றிருந்தேன். இதனை நீங்களும் பெறவேண்டும் என்றால் பிரபஞ்சப் படைப்பின் மீது முதலில் நம்பிக்கையும், அன்பும் கொண்டு விட்டால் அந்த அறிவு  வெளிப்பட்டு, எப்போதும் விழிப்புடன் உறங்கும் தன்மை உண்டாகி விடும். பரம் பொருளின் இந்த ஆற்றலின் மீது தான் மனித வாழ்வு இயங்கிக் கொண்டு உள்ளது. மனதில் தூய்மை மிகுந்த எண்ணமுடன், நெறிமுறை பிறழாத வாழ்வு கொண்டு, மனிதன் தனது கடமைகளை இறை நம்பிக்கையுடன் செய்து வர வேண்டும். அந்த நம்பிக்கைதான் சரியான பாதுகாப்பு என்பதை அனுபவ வாயிலாக அறிந்து, தன்னையும் தனது வாழ்வையும் வளர்ச்சியுறச் செய்ய வேண்டும். அதற்கு நேர்மறையான பிரார்த்தனை செய்யும் போது அதிகமான ஆற்றல் சக்திகளைக் கேட்டுப்பெற முயல வேண்டும். தனிமனித சக்தியுடன் இறையருளும் சேரும் போது ஏற்படும் வெற்றியால்தான் பிரார்த்தனை, தியானம், யோகம், தவம் இவற்றின் அருமை, பெருமைகளை உணர முடியும்.”

 

” இறைவனை நோக்கி மனிதன் மானசீகப் பிரார்த்தனை செய்தால், அவனிடம் உள்ள சோர்வு, சலிப்பு, சங்கடம்,பொறாமை, கோப, அகங்கார குணங்கள் அனைத்துகே விலகி விடும். இறைவனது கருணா சாகரம் பிரவாகமாகப் பொங்கிப் பெருகி, ஆத்ம தாகத்தைத் தணிக்கும் அருமருந்தாகச் செயல்படுகிறது. இதுவே இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை பலமாக வெளிப்படுத்த உதவும் பிரார்த்தனை சாதனமாகும். விஷ்ணுவை  எண்ணிப் பிரார்த்தனை செய்யும் தவயோகினி நானுமாவேன். விழிப்பு நிலையில் பூமியினுள் உறங்க வைக்கப்பட்ட கனல் சக்தியாகிய பூமிபுத்திரி நானே! இனி உங்களது மகளுமாவேன்; ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றது தெய்வக் குழந்தை. சுய நினைவு வரப்பெற்ற ராஜரிஷி ஜனகர் தன்னையே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் குழந்தையை மகளே எனவாரி அணைத்துக் கொண்டார். குழந்தை தன்னுடன் பேசுவதைப் போன்ற உணர்வு, தனக்கு ஏன் ஏற்பட்டது? என்பதை அவரால் அறிய இயலவில்லை. குழந்தை வளர வளர அதன் அறிவு வளர்ச்சி மிகுந்த ஆச்சரியம் தந்தது. வீரமோ சொல்லால் விளக்க இயலாமல் அது பிரமிக்கத் தகுந்ததாய் இருந்தது. சீதாதேவி என்னும் பெயர் நாமப்படுத்தி வீரமுடன் வளர்ந்து வந்த அவள், தனது ஐந்தாவது வயதில் ஜனகரிடம் பூஜையில் இருந்த சிவ தணுசை விளையாட்டாகத் தனது இடது கரத்தால் பூவை எடுப்பது போன்று தூக்கி நிறுத்தி விட்டாள். அதனைக் கண்டு வியந்து போனார் ராஜரிஷி.  அவரிடம் சீதா தேவி கூறியதாவது, “தந்தையே இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை காரணம் இது ஒரு பயிற்சி” என்றாள்

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.