ராவணனை எதிர்கொள்ள ராமர் பெற்ற சக்திகள்!

15

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(20) நாகவனம் பள்ளிகொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

ராவணனை எதிர்கொள்ள ராமர் பெற்ற சக்திகள்!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

உள்ளத்தில் தாம் கொண்டிட்ட புனிதம் மிக்க கருத்துக்களைக் கொண்டு வாழ்ந்து காட்டியவர் ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாவார். அதுதான் அவருடைய கருத்துக்களை ஒட்டிய வாழ்க்கை என உறுதிபட வாழ்ந்த  அவரது உள்ளத்தில் மாற்றுக் கருத்துக்கள் கிஞ்சித்தும் இடம் பெற்றதில்லை! அப்பாவி மனிதனாக அவதரித்துக் கள்ளம், கபடம் இல்லாத உள்ளத்தில், தாம் கொண்டிட்ட கருத்தில் நிலையாக நின்றதனால் ஜெகம் புகழும் வெற்றியைப் பெற்றவர். ஏகபத்தினி விரதனாக வாழ்ந்து மனித சமுதாயத்திற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தவர். தர்மத்தை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டிட்டவர். நலலொழுக்கம் உடைய இவர்  வேதங்களை முறையாகப் பயின்று அக்கால கட்டத்திற்குத் தேவையான வில் வித்தை மற்றும் தற்காப்புக் கலைகளிலும், போர்ப்பயிற்சியிலும் நிறைவுடன் பெற்று முறையாகப் பயின்று, பெரும் ஊக்கத்துடனும், வலிமை வாய்ந்த உடற்கட்டுடன் வெளித் தோன்றா வீரனாகத் திகழ்ந்தவர். பெற்றோருக்குப் பிரியமுடைய மகனாக இன்முகத்துடன் அன்புடன் விளங்கி மக்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றிருந்தார். தான் வாழ்ந்து வரும் சமுதாயத்திற்குச் சேவை செய்திடும் முக்கியமான அங்கம் வகித்தவர் ஶ்ரீ ராமர் ஆவார். தங்களது குலகுருவான வஷிட்ட மகரிஷியின் பூரண ஆசியைப் பெற்றவர். விஸ்வாமித்திர ரிஷியின் யாகத்தை லக்ஷ்மணனுடன் சேர்ந்து, மாரீசன், சுபாகு என்ற அரக்கர்களிடம் இருந்து காத்து உதவி புரிந்து “பலம் அதிபலம்” என்ற சக்தி ஆற்றலை உபதேசமாகப் பெற்றதால், பசி, தாகம், சோர்வில் இருந்து விடுபட்டு  வாழ்ந்தவர். 

 

விஸ்வாமித்திரிடமிருந்து கிடைத்தற்கரிய அநேக தெய்வீக அஸ்திரப் பிரயோக வித்தைகளைப் பயிற்சியாக ராமர் பெற்றார்.  தான் எண்ணிய காரியத்தைச் செய்து முடிக்க அஸ்திரம் ஏவுதல், அப்படியே பாணத்தால் ஆக்கிரமிப்பு செய்தல்,  தற்காப்பு செயலில் ஈடுபடுவது, எதிராளியின் பாதுகாப்பை உடைத்து சமாளிப்பது, தான் செய்யும் செயலில் இருந்து பின்வாங்குவது, ஆக்னேய அஸ்திரங்களால் உடலைச் சுட்டெரிப்பது, மற்றும் ஆயுதப் பிரயோக அடக்க வழிமுறைகள் அத்தனையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தார். அத்துடன் சிவன் நெற்றிக் கண்ணால் மன்மதனை தகனம் செய்த காமாஸ்ரமம் என்ற இடத்தில் ஓர் இரவு தவம் செய்து காமத்தை வெல்லும் ஆற்றலை அடைந்தார். நரமாமிசம் உண்டுவந்த அரக்கி தாடகையை வதைத்து ரிஷி சிரேஷ்டர்கள் வனத்தில் வாழவகை செய்து குரு விஸ்வாமித்திரரின் ஸ்பரிச தீக்ஷை பெற்றார். அவரது சித்தாஸ்ரம இடத்தில் தங்கி உபதேசமும் பெற்றார். மிதிலை நகரத்தின் ராஜரிஷி ஜனகர் நடத்தும் யாகத்தைக்காண குருவுடன் சென்றார். ராமரை என்றும் பிரியாத சகோதரன் லக்ஷ்மணன் எப்போதும் உடன் சென்றான். மிதிலையின் அருகில் இருந்த பாழ்பட்ட  ஆஸ்ரமம் ஒன்றில் ராமரின் பாதம்பட்டு கல்லானது பெண் வடிவம் பெற்றது. கௌதம ரிஷியின் பத்தினி  அகல்யாதேவியின் பேரழகில் மதிமயங்கி காமநோவுற்ற தேவேந்திரன், அவரில்லா சமயத்தில் அவரைப் போன்ற வேடத்தில் பலாத்காரம் செய்து அவள் கற்பைச் சூரையாடினான். அப்போது ஆஸ்ரமம் வந்துவிட்ட ரிஷி கடும் கோபமுற்று தேவராஜன் உடலெங்கும் பெண்குறிகள் தோன்றும்படியான அலியாகும்படி சபித்தார். அவமானமுற்ற தேவேந்திரன் யார் கண்ணிலும் தென்படாமல் மறைந்து வாழலானான். கணவன் என்று அறியாமல் அந்நியன் கரங்களில் உணர்வற்ற கல்லாக இருந்த அகல்யையை கல்லாக ஆகும்படி சாபமிட்டார். சாபமும் பலித்தது.

 

சாபமிட்டதால் ஆற்றல் சக்தி குறைந்து போன கௌதமரிஷி தவம் செய்திடப் புறப்பட்டார். அவரது பத்தினி சாப விமோசனம் அருளும்படி பாதம் பணிந்து மன்றாடிக் கேட்டுக் கொண்டாள். “பாற்கடல் மாதவன் மானுட அவதாரம் எடுத்து இங்கு வரும் சமயம், அவரின் பாதம்பட்டால்  மீண்டும் சுயரூபம் அடைவாய். அப்போது நானும் வந்து சேர்வேன் ” எனக்கூறிக் கைலாயம் சென்று தவமிருந்து இழந்து விட்ட சக்தியனைத்தையும் பெற்று சரியாக அகலிகை சாபநிவிர்த்தி நேரத்திற்கு வந்து விட்டார். அவ்வாறே அந்நிகழ்வுகளும் ஶ்ரீ ராமருக்குப் பாதபூஜையுடன் நடந்தேறியது. 

அதன் காரணமாக ரிஷி, ரிஷிபத்தினி பெற்றிருந்த  வரபலம் மற்றும் ஆற்றல் சக்திகள் அனைத்தையும் தத்தம் செய்துதரப் பெற்றுக் கொண்டு தசரத மைந்தன் சிறப்புற்றார். கௌதமமகரிஷி அகலிகை பெற்ற மைந்தன் சதானந்தர் என்பவர் ராஜரிஷி ஜனகரின் மகாயாகப் புரோகிதராக இருந்தவர், தனது தாய்க்கு  சாபவிமோசனம் தந்த ராமருக்கு இதயப் பூர்வமாக நன்றி கூறினார்.

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.