கைகேயியின் கலகம் தீமையில் தான் முடிந்தது.

359

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(33) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

கைகேயியின் கலகம் தீமையில் தான் முடிந்தது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தசரத மன்னரைக் கடுஞ் சொற்களால் சாடினாள் கைகேயி. ” உண்மையைக் கடைப்பிடித்து, நீதி தவறாமல் செங்கோல் ஓச்சிய  ரகுவம்ச வழியில் வந்த அரசே,  எனது கேள்விக்கு விடை கூறுங்கள். உமது உயிர் காத்த எனக்கு வரங்கள் இரண்டு தருவதாக வாக்குத் தத்தம் தந்தது தாங்கள் தான். பரதன் உங்கள் மகன் இல்லையா? சரிதான், கேட்ட வரங்களை நீங்கள் தர வேண்டாம். வாக்கு சத்தியத்தைத் துறந்து உலகில் அவப்பெயருடன் வாழ்வீர்களாக! வாய்மையின் பெருமையை உயர்த்தி வரம் தந்த, பலி, ததீசி, சிபி போன்ற அரசர்கள் தங்களின், உடல், பொருள், ஆவி மூன்றையும் தந்து கொடுத்த வாக்கை நிறைவேற்றினார்கள். அது தெரியுமா? ராமன் காடாளவும், பரதன் நாடாளவும் செய்து வாக்கைக் காப்பாற்றுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து போவது உறுதி” என்றாள். தசரதர் கண்களுக்குப் பழிவாங்க வந்துள்ள, கொல்ல வந்துள்ள தீயசக்தி எனக் கைகேயி தோன்றினாள். அவளை அமரச் செய்து இதமான வார்த்தைகளைக் கூறிய தசரதர்,  “எனதன்பே, ராமனைக் கேட்டாலே தனக்கு உரிய ராஜ்ய பாரத்தை பரதனுக்குத் தத்தம் செய்து விடுவான். ராமன் வனம் போக வேண்டாம். அவன் இங்கேயே தங்கி இருக்கட்டும். வனம் போனால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. சூரிய குலத்தை அழிக்கவந்த கோடரியாக மாறிவிடாதே. என் நெஞ்சு வெடித்தே விடும்” என்று கூறி விட்டுக் கெஞ்சிக் கதறி அழுதார். 

 

அதைக் கண்டு கடுங்கோபமுற்ற கைகேயி, ” இருவித குணங்கள் கொண்ட மன்னரே! வரம் கேள் தருகிறேன் என்று கூறிய வாய் வரம் தர மறுக்கிறது. என்னிடம் அன்புடன் சிரித்துப் பழகிய நீர் சினமும் கொள்கிறீர். எங்கேனும் இவை ஒன்றாக இணைந்து இருக்க முடியுமா? வள்ளல் என்று புகழப் பெற்று மகிழ்ந்த நீங்கள் வரம் தருவதில் கருமித்தனமும் செய்யப் பார்க்கிறீர். அரச வாழ்வு என்பது என்ன என அறியாமல் விளையாட்டாகக் கருதுகிறீர். எனக்குத் தந்த வாக்கைக் காப்பாற்றுங்கள் எனக் கேட்க மாட்டேன். மனதில் திடமான ஆண்மகனாக இரும். பேடித்தனம் கொண்டு பெண்ணைப் போல் ஏன் அழுகின்றீர்? அரசனாக உண்மை விரதம் பூண்டு விட்டால், உலகம், பொன், பொருள், உறவு, பந்தம் அனைத்தும் துரும்புக்குச் சமம் என்பதை மறந்து விட்டு அழும் மன்னா, இது உமது குலத்திற்கு அழகோ?” என ஏசி வெந்த புண்ணில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போன்று அரசரைத் துடிதுடிக்க வைத்து விட்டாள். மன்னன் அதற்கு, ” நீ என்னை என்ன வேண்டுமோ அப்படியே வைதுகொள். அது உன்னைப் பிடித்துள்ள பேராசைப் பேயின் குற்றமே தவிர உன்னுடையதல்ல. சனியின் ஆதிக்கம் நடக்கும் தசை இது. எமதர்மன் உனது வாய் மொழியாக எனக்கு வந்துற்ற மரணத்தை அப்படிக் கூற வைக்கின்றான். நிச்சயமாக பரதன் மறந்தும் கூட அரசாள விரும்பான். எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமான ராமராஜ்ஜியம்  வந்தே தீரும். ராமரின் ஆட்சியில் அயோத்தியில் மக்கள் நல்ல மனதுடன் சுபிட்சமாக வாழ்வார்கள். எவ்வுலகிலும் ராமரின் புகழ் பரவும். “

 

“விதியின் வலிமையால் உனக்குள் தீய எண்ணங்கள் தோன்றி உன்னை ஆட்டிப் படைக்கின்றது. கைகேயி உனக்கு உண்டான களங்கம் உன் இறப்பினும் நீங்காது. என்னுடைய பாவங்களின் பலனால் எனக்கு இத்தகைய துன்பம் ஏற்பட்டுள்ளது. இனி எனது வருத்தம் நீங்காது எனத் தோன்றுகிறது. உனது இஷ்டம் போல் உனது காரியத்தை நிறைவேற்றிக் கொள். உன்னைக் கை கூப்பிக் கேட்கின்றேன் என் முகத்தில் விழியாதே. எனது உயிர் எனதுடலை விட்டு நீங்கும் வரையிலும் என்னுடன் பேசாது அப்பால் சென்று விடு” என்று கூறியபடியே தரையில் வீழ்ந்து மயக்கமுற்றார்.

தசரதனின் வசை மொழிகளைக் கருத்தில் கொள்ளாத கைகேயி ராமரை அவசரமாக அழைத்து வரச் செய்தாள்.கோபகுணமற்ற, சோம்பலற்ற, பிறருக்குத் தீங்கு செய்ய எண்ணாத ஶ்ரீ ராமர் புன்னகை மாறாத முகத்துடன் அவள் எதிரில் வணங்கி நின்றார். அங்கு நிலவிய சூழல் விரும்பத் தக்கதாக இல்லை. சிற்றன்னை கைகேயின் முகத்திலும் அன்பில்லை. நெருக்கடியான எத்தகைய சூழல்  நிலவினாலும் அதனை சாமார்த்தியமாகச் சமாளிக்கும் திறமை படைத்த ராமர் பணிவோடு நின்றிருந்தார்.

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.