விக்கிரமாதித்தியன் உடலில் செயற்பட்ட அபூர்வ சக்தி!

492

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

மனிதனே புனிதன் பாகம் – 2

(16) விக்கிரமாதித்தியன் உடலில் செயற்பட்ட அபூர்வ சக்தி!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தம்பனவசியனின் குகைச் சிறையில் அகப்பட்டு விட்டார் விக்கிரமாதித்திய மன்னன். அவரை ஓய்வு மாளிகையில் காணாத மதியூகிபட்டி அங்கு மணக்கோலத்தில் இருந்த பெண்ணிடம் எல்லா விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார். தனது மூத்த சகோதரன் ஶ்ரீ வல்லபரை நினைக்கவும் அவரும் வந்து சேர்ந்தார். இவர்கள் இருவரும் தங்களுக்கு வனமாகாளி கோவிலருகே அபூர்வ காட்சி தந்த மகரிஷியை எண்ணி தியானத்தில் இருந்தனர். அப்போது மீண்டும் அவரது அபூர்வ தரிசனம் கிடைக்கப் பெற்றனர். பிரேதமாகக் கிடந்த ஓர் மனித உடல்  மீது அமர்ந்த வண்ணம் அவர் ஆகாய மார்க்கத்தில் மிதந்து கொண்டே பறந்தபடியே வந்து சேர்ந்தார். அருகில் வந்த போது தான் அது பிரேதம் போன்று வடிவமைக்கப்பட்ட ஓர் இயந்திர சாதனம் என்பது  புரிந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இவர்தாம் வேதாளமகரிஷி என்ற பெயர் பெற்றவர். விக்கிரமாதித்திய மன்னனுக்கு குருவாக விளங்கியவர். பட்டியின் வாயிலாக மாகாளியம்மனது அருளைப் பெற வைத்து நீண்ட ஆயுள், ஆரோக்கியத்திற்கு வழியமைத்துத் தந்தவர். வேதாளவாகனம் என்னும் வானூர்தி தனது இரண்டு கரங்களையும் பறவையின் இறக்கைகளை ஒத்த வடிவத்தில் விரித்தபடியே பறக்கும் ஆற்றலைப் போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. வேதாளமகரிஷியிடம் செய்தியைக் கூறியதும், தான் சென்று மன்னனை மீட்டு  வருவதாக உறுதி சொல்லிவிட்டு வானூர்தியில் புறப்பட்டுச் சென்றார்.

விக்கிரமாதித்திய மன்னனுக்கு உணவும், நீரும் உண்ணத்தராததால், உபவாச காலத்தில் உடலையும், மனதையும் இணைக்கும் இணக்கத்தை நன்கு அறிந்திருந்ததால் கண்களை மூடியபடி அமைதியாகத் தரையில் படுத்துக் கொண்டார். இதில் உள்ள நன்மை யாதெனில் உபவாசம் புறத்தில் நடந்து கொண்டிருக்கும் காலத்தில், உள்ளத்தில் இதயப்பூர்வமாக ஜபமும் நடந்து கொண்டிருக்க வேண்டும். உபவாசதவம் மிகச்சிறப்பாக மஹா யாகம் போன்று நடத்திக் கொண்டிருந்த விக்கிரமாதித்திய மன்னன் உள்ளம் தீபஜோதியாகப் பிரகசித்துக் கொண்டிருந்தது. காலன் என்கிற தம்பனவசியனை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்ற அவா விக்கிரமாதித்திய மன்னனுக்கு இருந்தது.  அசந்தர்ப்ப வசமாகத் தனக்கு மற்றொரு மணவிழா  நடந்த அன்று இரவு காட்டுக் கள்வன் காலன் திடீரெனத் தனது சிறு படையுடன் வந்து தாக்குவான் என எதிர்பாராததால் அன்றைய வெற்றி காலனுடையதாக அமைந்து விட்டது. மௌனமாகிப் போன மன்னன் தன்னைக் கைது செய்து அழைத்துச் செல்ல சம்மதித்தார். காரணம் காலனுடைய அந்தரங்க  இருப்பிடத்தை அறிந்து கொள்ள இதுவே நல்ல தருணம் வாய்தது என எண்ணி அவனுடன் சென்றார். பல நாட்கள் உபவாசத்திற்குப் பிறகு மன்னன் மாகாளியை எண்ணியபடியே மயக்கமாக நித்திரைக்குள் போனார்.  மன்னன் மரணமடைந்து விட்டதாகக் காலனுக்குச் செய்தி போனது. அதிகாலையில் வந்து பார்ப்பதாகக் கூறியதால் மன்னனது உடல் போர்வை கொண்டு மூடிக் கயிற்றால் கட்டப்பட்டது. அனைவரும் லாகிரி வஸ்த்துக்களை உண்டு மயக்கத்திற்கு ஆட்பட்ட நேரத்தில் வேதாள வாகனத்தில் அமர்ந்தபடி பறந்து வந்த மகரிஷி மன்னனைக் கருணை உணர்வுடன் அணுகினார்.

விக்கிரமாதித்திய மன்னன் தனது இன்னுயிரைத் துறந்திருந்தார் என்பதை வேதாளமகரிஷி உணர்ந்து கொண்டார். மன்னனது உபவாசச் செயல் மிகச் சிறந்ததாகவும், மனதின் ஆழத்தின் வெளிப்பாடாகவும் இருந்தது. பக்தி பூர்வமான உணர்வுடனும், மிகச்சிறந்த கவனத்துடனும்  தனது இன்னுயிரை மன்னன் இறைவனுக்கு அர்ப்பணம்  செய்திருந்தார். மனதின் ஈரம் என்ற இரக்க குணத்துடன், உபவாசம் இருந்த மன்னன், தனது நற்பணிகளாம் மகாமந்திர ஆற்றல் ஜெபத்துடன், இறைவனாகிய ஆத்மாண்டவனைத் தன்னருகே உடனிறுத்திக் கொண்டு, சகலத்தையும் தத்தம் செய்த பொழுதுதான் வேதாளவாகனத்தில் மகரிஷியால் எடுத்துச் செல்லப்பட்டார். வனத்தில் உள்ள மாகாளியம்மனது பீடத்தில் மன்னனது உடலைக் கிடத்திவிட்டு அங்குள்ள ரகசிய குகை ஒன்றினுள் வேதாளவாகனத்தைப் பாதுகாப்பாக வைத்தார். பிறகு அவர் தமது சிரசாசன முறைப்படி தலைகீழாகத் தவத்தில் ஆழ்ந்து போனார். இறையருளால் நடுநிசியில் ஜோதிப் பிரவாகம் பிரகாசமாகத் தோன்றியது. அது விக்கிரமாதித்திய மன்னனின் உடலின் மீது ஒளிர்ந்தது. பிறகு மறைந்து போனது. பொழுது விடிந்தவுடன் கண்களைத் திறந்த மன்னன் தனது முன்பு வேதாளமகரிஷி நின்று கொண்டிருப்பது புலனாகியது. அவருக்கு மன்னனது உடலினுள் செயற்பட வந்துள்ள தெய்வீக ஆற்றல் சக்தியானது முகத்தில் தேஜசாக வெளிப்பட்டுக்  கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் உணர்ந்து கொண்டார். வணங்கிய மன்னனைத் தான் வசித்து வரும் குகைக்குள் அழைத்துப் போனார். 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்

மதுரை M.மேகநாதன்.

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button