யார் இந்த தம்பன வசியன்?

322

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் – 2

 

(14) யார் இந்த தம்பன வசியன்?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மன்னன் விக்கிரமாதித்தியன் தனது தலை சிறந்த ஆலோசகரும், மதிமந்திரியும், தனது சிற்றன்னையின் மகனும், தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளவருமான பட்டி என்ற பெயர் நாமமுடைய, நாட்டு மக்களால் “மதியூகி” என்று மரியாதை நிமித்தம் அழைக்கப்படுபவருமாகிய, தனது அன்புச் சகோதரனுடன் மருத்துவ சாலைக்கு வருகை புரிந்தார். பரிவாரங்கள் மன்னன் ஆணைப்படி கொணர்ந்திருந்த, மலைத்தேன், பசுவின் நெய் ஆகியன குடம் குடங்களாக, நோயாளிகள் உடுத்துக் கொள்ள உடுப்புக்கள், மற்றும் காணிக்கை வகைகளுடன் வந்து, தலைமை மருத்துவரை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டார். தங்களது உடல் ஆரோக்கியம் கருதி நாடிப் பரிசோதனை செய்து கொண்டனர். அங்கு நடை பெற்ற வரவேற்புக் கூட்டத்தில் மருத்துவரின் கருத்துக்களை, ஆலோசனைகளை மன்னன் ஆர்வமாகக் கேட்டறிந்து கொண்டார். மேலும் மருத்துவ விடுதிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தேவைக்கு ஏற்பச் செய்வதாகவும் வாக்களித்தார். உடன் வந்த கணக்கர் அவைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டார். விக்கிரமாதித்திய மன்னன் தனது பொற்கால ஆட்சியில் ஏற்படும் இடையூறுகளைக் களைவதற்காக, வருடத்தில் ஆறுமாதங்கள் தேசசஞ்சாரம் செய்து வரலானார். மக்களுக்குத் தீயவர் தரும் இன்னல்களைக் களைய அந்த அவகாச காலம் போதுமானதாக இருந்தது. அத்துடன் தேசசஞ்சாரத்தில் மக்களை நேரிடையாகச் சந்திக்கவும், அவர்களின் குறை நிறைகளை நன்கு அறிந்து கொள்ளவும் ஏதுவாயிற்று. அவரது அறிவு நல்ல முடிவுகளை உடனுக்குடன் எடுத்துச் செயல்படவும், சிறப்பான தீர்வுகளை உடனடியாக மக்களுக்கு வழங்கவும் அவரால் முடிந்தது.

 

அடர்வனம்தனில் உள்ள வழிதனில் நகருக்கு வரும் பயணிகள், மற்றும் வியாபாரிகளை வழிமறித்து அவர்கள் உடமைகளைக் கவர்ந்து செல்வதால் “காட்டுக் கள்வன்” என்றும், மற்றவர்களை வசியத்தால் அடிமை கொள்வதால், “தம்பன வசியன்” என்றும், நரபலியை நாட்டில் பரப்பி அநேகவித பாதகங்கள் செய்து, தீமை சக்திகளை உருவாக்கி வருவதால், “அகோர பைரவன்”  என்றும், விக்கிரமாதித்தனை எதிர்ப்பதற்கும், கொல்வதற்கும் பற்பல சூட்சிகளைக் கடைப் பிடிக்கத் துவங்கி, கள்வர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவை ரகசியமாக வனத்தினுள் உருவாக்கிய அவனது உண்மைப் பெயர், “காலன்” என்பதாகும். இவன் மன்னன் விக்கிரமாதித்தியனுடைய ஆதரவைப் பெற்றவர்களைத் தாக்கி அழிப்பதில்தான் குறியாக இருந்தான். இவனுடைய தயவில்தான் வேதியர் திரு வேணு நாதரும், அவரது மனைவி திருமதி ரேவதிதேவியும் கடுமையாகத் தாக்கப்பட்டு மண்டை பிளந்து மருத்துவ விடுதியில் கிடந்த நிகழ்ச்சியைத்தான் முன்பு பார்த்தோம். அதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. மன்னன் விக்கிரமாதித்தியன் வேதியர் வேணுநாதருக்கு நகரின் வெளிப்புறத்தில் விவசாய நிலமும், அதில் குடியிருக்க சிறுமனை ஒன்றையும் தானமாக அளித்திருந்தார். இவர்களுக்குப் பெண்குழந்தை ஒன்று புஷ்பம் என்ற பெயருடன் வளர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டிருந்தது. வேதியர் வேணுநாதர் அவர்களுக்கு மன்னர் மாளிகையில் உத்தியோகம் இருந்தது. இவரது தலைமையில் தான் ராஜ போஜனம் தயாரிக்கும் பரிசாரகர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ராஜ போஜனத்தைச் சுவை பார்த்து அதில் குற்றமற்ற, சுவைமிக்க பதார்த்தங்களை மட்டுமே ராஜ விருந்தோம்பல் நிகழ்ச்சியில் அளித்து மன்னன் பாராட்டையும் பெற்றிருந்தார். பரிசோதிதனை செய்யப்படாத எந்த உணவும் மன்னனை நெருங்கிடாமல் அக்கறையுடன் வேதியர் வேணுநாதர் கவனித்து வந்தார்.

 

ஆரம்பத்தில் விக்கிரமாதித்தியன் நாடு பரப்பளவில் மிகவும் சிறியதாகத்தான் இருந்தது. தவத்தில் ஈடுபாடு கொண்ட ராஜன், தாந்திரீக வழியில் மாகாளியின் அருள் பெற்றார். அதற்கு மகாமதிமந்திரி மதியூகி என்ற பட்டி காரணமாக இருந்தார். கொள்கைப் பிடிப்பும், அறிவின் செயற்பாடு உன்னதமாகவும் நல்வழியை நாடியது. மகாளியின் அருள் பெற்ற வனத்தில் பத்துக்குப் பத்துகாத தூரம் மாகாளிப் பட்டினம் நிர்மாணிக்கப்பட்டது. ஒரு காதம் என்பது பத்து மைல்கல் தூரம். அதாவது பதினாறு கி.மீ தூரம். நம்பாமல் இருக்க இயலவில்லை! அமானுஷ்ய சக்திகளின் தொடர்பினால் மன்னனுக்கு இது சாத்தியமாகி இருக்கலாம் என்றுதான் யூகிக்கத் தோன்றுகிறது. ஆச்சரியமாக இருபத்தி ஐந்தாயிரத்து அறுநூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு அக்கால மாகாளிப்பட்டின நாடு விஸ்தீரணம் ஆக அமைக்கப்பட்டது. தம்பனவசியன் என்ற காலன் செய்த ஒரு பயங்கரத்தினால் அது உஜ்ஜெய்னி மாகாளிப்பட்டினம் என மாறியது . நாடு பெரிதாக ஆக ஆக எதிர்ப்பும், மன்னனை அழிக்கத் துடிக்கும் ஒற்றர் கூட்டமும் பெருகத்துவங்கி இருந்தது. 

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்

மதுரை M.மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.