மனிதனே புனிதன் பாகம் – 2 முன்னுரை

58

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் -2 

முன்னுரை:

 

அம்மை ஆதிசக்தி துணை!                  

இயக்கும் ஈஸ்வரர் துணை!

 

மூலக்கணபதி முப்புரம் எரித்த சிவனார்

எப்புரமும் காக்கும் விஷ்ணு நான்முகன்

சுகம் தரும் சுப்பிரமணிய முருகர்

மாதாபிதா குருவே  தெய்வம் என்றுரை செய்த முப்பத்து முக்கோடி தேவாதிகளே 

கோடானு கோடி நமஸ்காரங்கள்!

 

“அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முகற்றே உலகு” — திரு வள்ளுவர்.

 

முன்னம் செய்த தவமோ அன்றி

முன்னோர் செய்த அறமோ- எமையும்

ஆண்டுகொண்டீர் அம்மையே அப்பா ஈஸ்வரா!

 

உலகோர் உய்ய வந்த உத்தம குருநாதா!

கலியை வென்று வளியுற் புகுந்து சுத்த

வெளியிற் கலந்து ஜோதியாய் உலகிற்கு

ஒளியாய் வானோர் வாழ்த்த வையகம் வணங்க ஈஸ்வர குமாரராய் நாகவனம்

வரும் பக்தர்கள் வாழ்வில் வளம் பெறவே

நல்லருள் புரியும் வள்ளல் பெருமான்!

 

எமக்கிந்த மாபெரும் வாய்ப்பை நல்கிய

“மனிதருள் இவரே புனிதர்” என வாழும்

அன்னையருள் தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களை எமதுடல் அணுக்கள் ஆறுஇலட்சம் கோடியும் நன்றி கூறிடப் பணிந்தே வணங்குகிறோம்!.

 

ஆத்ம நேசர் ஶ்ரீசெல்வ ஆஞ்சநேயரின் அன்பு நிறை பக்தர்களே! நாகவனம் வாழ் தவத்திருமதிவஶ்ரீ மீனாம்பாள் நாச்சியார் உடனுறை ஶ்ரீ நாகராஜர் சுவாமிகளின் நேசமிகு அன்பர்களே! வணக்கம்.

 

முதலில் இந்த மாபெரும் ஆன்மீக வழிகாட்டும் சூட்சமங்கள்  பல நிறைந்த  நமது சுவாமியின் வாழ்க்கை வரலாற்று நூலைத் தொகுத்து வழங்கிய ஈஸ்வர குமாரர் தொண்டர் திரு.மேகநாதன் சுவாமி அவர்களுக்கு முதற்கண்  நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம். இந்நூல் பற்றி சில வரிகள் :-

 

ஆதிசக்தியின் அருளால் தோன்றி, ஈஸ்வரர் கருணையால் இயங்கும் அனைத்து ஜடப்பொருள், உயிர்த்தொகைகள் அனைத்திலும், படைப்பின் பொருளறிந்து அதனை சிறப்பிக்கும் தகுதி மனிதப்பிறப்பிற்கே உண்டு.  ஆகையாலேயே “மானுடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவை. ஆனாலும் மனிதன் மாயையில் சிக்கி தவிப்பதையும், அதிலிருந்து மீள வேண்டியதன் அவசியத்தையும் “எண்ணிறந்த பிறவிகள் எடுத்திளைத்தேன் இறைவா”, என்றார் மணிவாசகர். மேலும் மனித வாழ்வை “பிறவிப்பெருங்கடல்” என்றும் வாழ்வில் மனிதன் பெறவேண்டியவை அருட்செல்வம், பொருட்செல்வம், செவிச்செல்வம், போன்ற பல பேறுகளேயென்றும் அவற்றை  வென்றெடுக்க, “பற்றுக பற்றற்றான் பற்றினை” என்று பதிலும் உரைத்தார் திருவள்ளுவ நாயனார். செல்ல வேண்டிய பாதை இதுவென  இறைவனின் சத்திய தர்ம வழியையும், இயற்கையின் சட்டங்களையும் மதித்து வாழவேண்டும் என்றும் மஹாகணம் பொருந்திய  சற்குரு ஆதிகுருநாதர் தொடங்கி பல குருமார்கள் பல வழிகளில் மனிதன் வாழ வேண்டிய முறைகளையும், பெறவேண்டிய பேறுகளையும், ஆற்ற வேண்டிய கடமையையும்  போதித்தே வந்துள்ளார்கள். அவ்வழியில் இக்கலியில் இறைசக்தி நமக்களித்த அருட்கொடையே நமது சுவாமி அவர்கள்.

 

இந்நூல் வெளிப்படுத்தப்படுவதன் நோக்கம் என்னவென்று நம் சுவாமியே மிகவும் எளிமையான,  ஆழமான வார்த்தையால் சொல்லிவிட்டார்,  “நல்லோர் பயனடைவர்” என்று.  நன்றி சுவாமி. இது அனைவரும் உணர்ந்து அறியத்தக்கது. நன்றி, வணக்கம்.

—— தொடரும்……..

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

என்றென்றும் அன்புடன்,

ஞானயோகி திரு K S மணிகண்டன்,

தூத்துக்குடி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.